பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
க. நா. சுப்ரமணியம்

லங்கைமானில் பிறந்த க.நா.சுப்ரமணியம் சுத்தமான தஞ்சாவூர்காரர். நவீன தமிழில் கலை கலைக்காகவே என்ற கோஷத்தை முன் வைத்தவர். நாவலாசிரியராகவும், சிறுகதையாசியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், விமர்சகராகவும் பெயர் எடுத்தவர். பதினைந்து தமிழ் நாவல்கள் எழுதியவரின் சிறந்த படைப்பாக பேசப்படுவது ‘பொய்த்தேவு' ‘அசுரகணம்' இவ்விரண்டுமே. இவர் நாவல்கள் எல்லாமே சோதனைப் படைப்புகளே. மனித உணர்வுகளை மையமாகக் கொண்டனவே. மருட்சி தந்தாலும் மதித்துப் போற்றத்தக்கன. தெய்வ ஜனனம், ஆடரங்கு, கருகாதமொட்டு ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும் குறிப்பிடத்தக்கன.

ஆங்கிலத்தின் மூலம் ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களையும் படித்து அவற்றில் ஈடுபாடு கொண்ட க.நா.சு அன்றைய சூழ்நிலையில் தம்மைப் போன்றவர்கள் தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதைப் பார்த்துத் தாமும் எழுதலாமே என்று சிறுகதைகள் எழுதத்துணிந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். அவருடைய நண்பர் மெளனியைப் பின்பற்றி புதிய உத்திகளுடன் புதிய கதைப்பொருள்களையும் கையாளும் சோதனைகளையும் க.நா.சு செய்து பார்த்திருக்கிறார். ஆனால் இவரது முயற்சிகளில் மேனாட்டு இலக்கியச் சாயல் அப்பட்டமாகத் தலைதுாக்கி நின்றதால் தமிழ்ச் சிறுகதை வகையில் அவற்றைப் பொருத்திப் பார்க்கும்போது இவருக்கு முந்தியவர்களின் இலக்கியத் தரத்தை இவரிடம் காண முடியவில்லை...” என்று சிட்டி சிவபாதசுந்தரம் கூறுகிறார்கள்.

மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களில் பிறநாட்டு இலக்கியப் பாதிப்பில் தமிழ்நாவல், சிறுகதைத் துறைக்கு விமர்சனக் குரல் கொடுத்து அதை வளர்த்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவ்வளவு இருந்தும், முற்போக்கு இலக்கியத்தை நேர்மையாக எதிர்கொள்ளாமல் ஓரவஞ்சனையாக எதிர்த்த கொள்கையே அவருக்கு மிகப்பெரிய பலகீனமாக அமைந்தது என்று துணிந்து சொல்லமுடியும்.

அவருக்கு இன்றைக்கும் சிஷ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது யோசிக்க முன்வருவார்களா?