பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

95


தந்திருந்தபடி, தாளம், பாவம் தவறி, விட்டுப் போகாமல் நாட்டியமாடினாள். நாலாவதாகப் பாடப்பட்டது ஓர் எளிய பதம். அது லக்ஷ்மிக்கு மிகவும் பழக்கமானது; நாட்டியமாட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவளுக்குப் பாடமானது. அதற்கு இசைந்து ஆடிக்கொண்டிருக்கும்போது லக்ஷ்மி மறுபடியும் நாட்டியக் கலையையும், மிஸ் ஊர்வசியையும், சபையையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

மிஸ் ஊர்வசி முகத்தில் சலனமே இல்லாமல் உட்கார்ந்திருந்தான். தன் நாட்டியம் அவளுக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று அவள் முகத்திலிருந்து லக்ஷ்மியால் அனுமானிக்க முடியவில்லை. சிலசமயம் ஊர்வசியின் கண்கள் சபையில் அவள் அருகில் உட்கார்ந்திருந்த ஒருவருடைய கண்களை நாடித் தேடுவதை லக்ஷ்மி கவனித்தார். அந்த மனிதர் ஊர்வசியுடன் வந்தவர் என்று லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அவர் அபிப்பிராயத்தை அறிய விரும்பியவள் போல ஊர்வசி ஏன் அப்படி அடிக்கடி அவர் முகத்தை நோக்கினாள்? ஊர்வசியையும் விட அவர் நாட்டியக் கலையைப் பற்றி அதிகம் அறிந்தவராயிருப்பாரோ? அல்லது, ஒரு தீர்மானத்துக்கு வருமுன் அவர் அபிப்பிராயத்தையும் கலந்து அறிந்துகொள்வது நல்லது என்று ஊர்வசி எண்ணினாளோ? தன் நாட்டியம், தன் வயதுக்கு எவ்வளவுதான் உயர்ந்தானாலும், ஊர்வசிக்கு உயர்ந்ததாகப்படாது என்பது லக்ஷ்மிக்கும் தெரியாத விஷயமல்ல. ஏதோ குற்றங்குறைகள் அதிகம் இல்லை, முன்னேற இடமிருக்கிறது' என்று ஊர்வசி சொல்லிவிட்டால் போதும் என்று எண்ணினாள் லசஷ்மி.

அந்தப் பதம் முடிந்துவிட்டது. அடுத்த பதம் கொஞ்சம் கடினமானது. அது நடக்கும்போது லக்ஷ்மியால் வேற எதைப்பற்றியும் சிந்திக்க முடியாது. அப்படியும் அவள் வெகு சிரமப்பட்டு ஊர்வசியும், அவளுடன் வந்த நண்பரும் தன் நாட்டியத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவத்திலிருந்து அறிந்துகொள்ள முயன்றாள். சபையில் இரண்டொருவர் இடையிடையே “சபாஷ்!” என்றார்கள். ஆனால் அவர்களுடைய சபாஷால் மட்டும் லக்ஷ்மி திருப்தி அடைவதாக இல்லை. ஊர்வசியும், மற்றவரும்...? ஆனால், நிச்சலனமாயிருந்த அவர் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றிற்று. அந்தப் புன்னகையின் நிழல்போல ஊர்வசியின் முகத்திலும் லேசான ஒரு புன்னகை படர்ந்தது. அது கேலிப் புன்னகைதான்; சந்தேகமில்லை என்று லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. அவள் லயம் தவறிவிட்டது. அதைக் கவனித்த அவள் தாயும் பாட்டனும் விதவிதமான சைகைகள் காட்டினார்கள்; முகத்தை சிணுங்கிக் கொண்டார்கள். லக்ஷ்மி ஏதோ சமாளித்துக்கொண்டு