பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சோலை சுந்தரபெருமாள்


ஊர்வசியையோ அவள் நண்பரையோ கவனிப்பதில்லை என்ற திடசங்கல்பத்துடன் நாட்டியமாடினாள். ஆனால் அவளையும் அறியாமலே அவள் கண்கள் அந்தப் பக்கந்தான் சென்றன. அவர்கள் இருவர் முகத்திலும் ஏளனப்புன்னகை இன்னமும் படர்ந்திருந்தது.

அதற்கடுத்த நாட்டியம் துவக்கும்போது லக்ஷ்மியின் மனத்தில் ஒரு கசப்பு தோன்றிவிட்டது. பத்து வருஷங்கள் வெற்றியில்லாமல் பொதுஜனத்தின் கீழ்த்தரமான அபிருசிகளுடன் போர்தொடுத்து ‘ரிடையராகி' விட்ட கலைஞன் மனத்தில் கூட அவ்வளவு கசப்பு ஒருங்கே திரண்டு காணப்படுமா என்பது சந்தேகந்தான். குழந்தைதான் எனினும், வயது அதிகம் ஆகாதவன்தான் எனினும், கலையிலே உள்ள ஒரு தேர்ச்சியினாலும், பழக்கத்தினாலும் அவள் உள்ளமும், உணர்ச்சிகளும் கனிந்து நிறைந்திருந்தன. அவள் வயதுச் சிறுமிகளுக்கும் சாதாரணமாக எட்டாத சிந்தனைகளும், ஆர்வங்களும், உணர்ச்சிகளும் அவளுக்கு எட்டின. அவள் ஊர்வசியையும் சபையில் மற்றவர்களையும் மறந்துவிட்டுப் பாட்டைத் தானும் சொல்லிக்கொண்டு, பாவத்தில் ஈடுபட்டு நாட்டியும் ஆட ஆரம்பித்தாள். தன் நாட்டியம் எப்படியிருக்கும் என்றோ, அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றோ, இந்த ஒரு பாட்டின் போது அவள் கவலைப்படவில்லை. அது முடிந்தவுடன் சபையில் ஒரே ஒரு குரல் மட்டும் வெகு உற்சாகத்துடன் 'சபாஷ்' என்றது. யார் அப்படிச் சொன்னவர் என்று லஷ்மி கண்ணைத் திறந்து பார்த்தாள்; இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன். அவனுக்கு நாட்டியத்தைப் பற்றி ஏதாவது தெரியுமோ, தெரியாதோ, சிறுமிக்கு உற்சாக மூட்டவேண்டியது அவசியம் என்று தெரிந்திருந்தது. இதைப்பற்றி லக்ஷ்மி யோசித்து முடிக்குமுன் சபையில் சிலர் கை தட்டினார்கள். வேறு சிலர் லேசாகக் கையைத் தட்ட முயன்றார்கள். அதிகச் சப்தம் செய்யாமல், தன்னையும் அறியாமலே லக்ஷ்மியின் கண்கள் ஊர்வசியின் பக்கம் திரும்பின. அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லாமலே ஓர் உத்ஸாகமும் இல்லாமலே உட்கார்ந்திருந்தாள். அவள் நண்பரும் அப்படியே, மரக்கட்டை போல, அவள் நாட்டியத்தையும் அவள் உடலையும் அதற்கப்பாலும் ஊடுருவிப் பார்ப்பவர்போல உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாட்டியம் ஆரம்பமாயிற்று. அதுவும் சற்றுக் கடினமானதுதான்; எனினும் லக்ஷ்மி தன் கவனம் முழுவதையும் நாட்டியத்திலே செலுத்தாமல் சபையிலும் செலுத்தி ஆடினாள். சபையில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. ‘பாவம்! சின்னப் பெண். ரொம்பக் கஷ்டப்படுத்தக்கூடாது”. அப்படிச் சொன்னவர் யார் என்று ஊர்வசி