பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

97


திரும்பிப் பார்த்ததை லக்ஷ்மி கவனித்தாள். முந்தி இருந்த கசப்பு மறுபடியும் அவள் மனத்தில் தோன்றிவிட்டது. ஊர்வசி என்ன அவ்வளவு பிரமாதமாகவா நாட்டியமாடினாள்? அதெல்லாம் ஒன்றுமில்லை. பெரிய இடம்; எது செய்தாலும் புகழுவதற்கென்றே ஒரு கோஷ்டி சதா உடன் இருக்கும் ‘ஊர்வசியின் வெற்றியும் புகழும் கலையின் வெற்றியல்ல; அந்தஸ்தின் வெற்றி, அவ்வளவுதான்' என்று பிறர் சொல்லக் கேட்டது லக்ஷ்மிக்கு ஞாபகம் வந்தது. அது உண்மையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று தோன்றியது. லக்ஷ்மிக்கு கலையில் படிப்படியாக அடி எடுத்துவைத்துச் சிரமப்பட்டு முன்னேறியிருந்தால் ல கூடி மியின் கஷ்டங்களைக் கண்டு அவளுக்கு அனுதாபம் பிறந்திராதா? முகத்தில் இப்படி எவ்வித அசைவும் இல்லாமே உட்கார்ந்திருக்க முடியுமா? ஆனால் தானும் நாட்டியத்தில் முழு மனத்தையும் செலுத்தாமல் ஊர்வசியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் நாட்டியம் சரியாக வருமா? அது தன்மேல் பிசகுதானே என்று எண்ணினாள் லக்ஷ்மி.

ஏதோ சிந்தனையாக, அடி எடுத்துவைத்துப் பாவத்தை ஒட்டி வேகமாக நகரும்போது கால் விரிப்பில் தட்டிவிட்டது. தடுமாறிக் கீழே விழுந்துவிட்டாள். சபையில் 'த்ஸொ த்ஸொ' என்று அனுதாபக் குரல்கள் கேட்டன. ஓரிரண்டு குழந்தைகள் சிரித்தன. மற்றவர்கள் தன்னைத் தூக்கிவிட வருமுன், லக்ஷ்மி சமாளித்துக்கொண்டு தானே எழுந்துவிட்டாள். அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. உதட்டைப் பிதுக்கி அழுகை வராமல் அடக்கிக் கொள்ள வெகு சிரமப்பட்டாள். என்ன அவமானம் இது, அரங்கேற்றத்திலேயே ஆடையைச் சரிப்படுத்திக்கொள்ள அவள் ஆடரங்கிலிருந்து உள்ளே ஒரே எட்டில் தாவிப் போய்விட்டாள். அவள் காதில் ஏதோ முரசடிப்பதுபோல் இருந்தது; சபையில் பேசிக் கொள்ளப்பட்டது. ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் தெளிவாக எதையும் காண வில்லை. அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

அப்போது சபையில் ஒரு தாடி மீசையுள்ள பெரியவர், பெரிய சரிகை அங்கவஸ்திரத்துடன் எழுந்து நின்று பரதநாட்டியத்தைப் பற்றிப் பொதுவாகவும், அன்று ஆடிப் பெண்ணைப் பற்றியும், அவளைப் பயிற்றுவித்த நட்டுவனாரைப் பற்றியும் புகழ்ந்தும் சில வார்த்தைகள் பேசினார். இதில் பாதிக்கு மேல் லக்ஷ்மியின் காதில் விழவில்லை; காதில் விழுந்ததையும் அவள் சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. ஆடை அணிகளைத் திருத்திக்கொண்டு, மறுபடியும் அரங்குக்குள் பிரவேசிக்கத் தயாராக நின்றாள். அப்பொழுதும் அவள் கண்கள் ஊர்வசியையே நாடின.