பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

165


5சிவாஜி புரந்தர்க்கோட்டைக்குச் சென்றிருந்தார். தன்னுடைய அமைச்சராகிய சுவர்ணர் என்கிற சோனாஜி பண்டிதரையழைத்து அதுகாறும் நடந்த செய்திகளைக் கூறி, அவுரங்கசீபுவையும் அல்லியேதில்ஷா வையும் அடக்க வேண்டும் என்று தன் எண்ணத்தைக் கூறினார். சுவர்ணரும் இசைந்தார். தான் அவர்களோடு போர் தொடுப்பதற்கு முன் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்தார். மேற்குக் கடற்பக்கம் பிரதாபகெடிக்கு அருகில் ஜாவளி என்ற நகரத்தைத் தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், வழியிலுள்ள பல பேரும் அல்லியேதில்ஷாவுக்குத் தோஃபா கொடுக்கிறவர்கள் என்றும் அறிந்து அவர்களையும் வெற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணினார். முதலில் சிம்ம கெடியைப் பிடிக்க வேண்டும் என்று கருதிப் பெரும் படையொன்றைக் கூட்டினார். விஜயதசமி நாளில் படைகளுடன் புறப்பட்டார்; வழியில் பலரையும் வென்றார்; பாசிராஜா. கிருஷ்ணராஜா, ஜனகராஜா சந்திரராஜா இந்த நான்கு பேருக்குரிய கோட்டையைப் பிடித்து (ராய்காட் என்று பெயரிட்டு)ப்பின் ஜெயவலி நகரத்துக்கு வந்தார்: சந்திரராஜாவைத் துரத்தினார்; இதற்கு அருகிலுள்ள பிறதாப துருக்கத்தையும் கைவசப்படுத்திக் கொண்டார்; இவ்விரண்டிடங்களிலும் தன் படையை நிறுத்தினார்; மேற்குக் கடற்கரைக்குச் சென்று, கடலில் ஒரு கோட்டையெடுப்பித்துச் சிவலங்கை யென்று பேர் வைத்தார்; அங்கு அரியணையிலேறித் தம் பேரால் சிவசகம் என்று ஆண்டுமுறை ஏற்படுத்தினார். இவற்றையெல்லாம் செயவலி நகரத்துச் சந்திர ராஜா, அல்லியேதில்ஷாவுக்குத் தெரியப்படுத்தினார்.

சிவாஜியைத் தொலைத்துவிட வேண்டும் என்று எண்ணிய அல்லியேதில் ஷா, தன்னிடத்திலிருந்த பன்னிரண்டு பிரபுக்களில் அஃப்சல்கான் என்கிற அப்துல்லாகானை அழைப்பித்துச் சிவாஜியின் செயல்களைக் கூறி, வக்கீல் கிருஷ்ணாஜி பண்டிதரையும் அழைத்துக்கொண்டு பன்னிருவரும் ஒருங்கு சென்று சிவாஜியைச் சிறைப்பிடித்துவருமாறு ஆணையிட்டார். இப்பொழுது சிவாஜி பூனாவுக்கு வந்ததாகத் தெரியவந்தது. உடனே சந்திரராஜா. பண்டரிபுரத்து வழியாக ஜாவளிக்குச் சென்று ஜாவளியையும் பிறதாப கெடியையும் பிடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். அஃப்சல்கானும் புறப்பட்டார். சில அபசகுனங்கள் தோன்றின. பத்தேலஷ்கர் என்ற பட்டத்துயானை இறந்துவிட்டது. இதனையும் பொருட்படுத்தாது அஃப்சல்கான் மேற்கொண்டு சென்றார்.

அப்பொழுது சிவாஜிக்குக் குல தெய்வமாகிய பூரீஜெகதாம்பா துளஜா பவானி தோன்றி, ஜாவளிக்குச் செல்லுமாறு பணித்து, அங்கு அஃப்சல்கானை அழிப்பதாகக் கூறியது. சிவாஜி, பூனாபக்கலிலுள்ள கோட்டைகளை வலுப்படுத்தி ஜாவளியை நோக்கிச் செல்கிறவர், வழியிலுள்ள கோட்டைகளுக்குரிய சர்தார்களுக்கு அஃப்சல்கானைச் செல்வதற்கு விடுமாறும், தம் சேனைகளைக் காட்டாமல் மறைத்து வைக்குமாறும் பணித்துச் சென்றார்: 'வெற்றி பெற்றதும் நகரா அடிக்கப்படும்; அப்பொழுது வெளிப்பட்டு அஃப்சல்கான் படைகளை அழிக்க வேண்டும்’ என்றும் அறிவித்தார்.

அஃப்சல்கான் பண்டரிபுர வழியாகச் செல்லாமல் விட்டோபா மூர்த்திக்கு