பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தஞ்சை மராட்டிய

4. மேற்கண்ட பிரதாப சிம்மர் காலத்தில் ஐரோப்பியரிடமிருந்து சுங்க வரி வாங்கியமை பற்றியது.[1]

5. சரபோஜியின் மாதேவி அகல்யாபாயி சாகேபாவுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தமை; அக்குழந்தைக்குப் பாயம்மா பாயி என்று பெயர் வைத்தமை.[2]

6. பகவந்தராயரின் பெளத்திரரான விட்டலராயரின் புத்திரரும்' என்று பாவு ராவினுடைய தந்தை பெயரும் பாட்டனார் பெயரும் கூறியமை"[3].

மேற்கண்டவை மெக்கன்சி சுவடிகளில்லாமல் கல்வெட்டில் காணப்படு வதற்கு, அதாவது போ. வ. ச. வில் காணப்படுவதற்கு உரிய காரணம் சரியாகப் புலப்பட்டிலது. மேல் ஐந்தாவதாக உள்ள செய்தியை நோக்கின் தமிழில் எழுதப்பட்ட காலத்தில் நிகழாத செய்தி, மராட்டியில் மொழி பெயர்ப்புச் செய்த இடைக்காலத்தில் நிகழ்ந்தமையின் இடைச்செருகலாகச் சேர்த்தனர் போலும் என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஆறாவது செய்தியை நோக்கின் அந்நாளைய பழக்கப்படி தந்தைபெயரோடு, பாட்டன் பெயரும் விடுபட்டிருந்தமை கண்டு மராட்டியில் சேர்ந்தனர் என்று கொள்ளக்கிடக்கிறது.

சுவடியின் காலமும் கல்வெட்டின் காலமும்

சுவடியின் காலம் "சகம் 1725 ருத்ரோத்காரி வருஷம் சித்திரை மாதம்; 1803 மார்ச்சு மாதம் 25" என்பதாகும்.[4]

கல்வெட்டின் தமிழாக்கத்தில், "சகம் 1725 ருத்ரோத்காரி வருஷம் மார்க்க சீர்வு மாதம் அமாவாசை கி.பி. 1803 டிசம்பர் மாதம் 13உ" என்றுள்ளது.[5]

மேற்கண்ட இருவேறு காலக்கூறுகளால் தமிழ்ச்சுவடி முதன் முதலில் தயார் செய்யப்பட்டது என்றும், அது தானும் 25-3-1803 இல் எழுதி முடிக்கப்பட்டது என்றும், இதன் பின்னர் இத்தமிழ்ப் பகுதி மராட்டியில் பெயர்த் தெழுதப்பெற்றுக் கல்லெழுத்தில் பொறிக்கப் பெற்றதாதல் கூடும் என்றும். அச்சிலாசாசனம் தானும் 13-12-1803 இல் வெட்டி முடிக்கப் பெற்றது என்றும் கொள்ளக்கிடக்கின்றன. மேலே எழுதிய வண்ணம், சரபோஜியின் மாதேவி அகல்யாபாயி சாகேபா அவர்கள் மூன்றாவது பெண் மகவீன்றமை கல்வெட்டிலிருக்கச் சுவடியில் இல்லாமையால் சுவடியெழுதி முடித்த பிறகே இச்செய்தி நிகழ்ந்ததென்று கொள்ளலாம். இதனானும் சுவடியினும் கல்வெட்டுப் பிந்தியது என்று உறுதி பெற வாய்ப்புண்டு.


  1. 13. போ. வ. ச. பக்கம் 111-112
  2. 14. போ, வ. ச. பக்கம் 180
  3. 15. போ. வ. ச. பக்கம் 130
  4. 16. டி 3 180 இன் இறுதிப்பக்கம் காண்க
  5. 17. போ. வ. ச. பக்கம். 189