பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தஞ்சை மராட்டிய


85 பக்கங்களுடையது; பக்கம் 1க்கு 54 வரிகளுடையது. எழுத்துருவம் மிக அழகாகவும் உள்ளது. இதில் கூறப்படாத செய்திகள் யாவை அதாவது மெக்கன்சி சுவடிகளில் அதிகமாக உள்ளவை யாவை என்பவை பற்றி இதன் முன் தலைப்பில்[1]" கூறப்பட்டுள்ளன.

மெக்கன்சி சுவடிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது அச்சிட்ட போ. வ. ச.வில் பக்கம் 17இல்,

"ஜிஜாபாயி சாகேப் சாலி வாகன சகம் 1551க்குச் சரியான இங்கிலீஷ் வருஷம் 1629 பிரமோதுரத வருஷத்தில் பிரசவித்துப் புத்திர பாக்கியத்தைப் பெற்றாள். அப்புதல்வனுக்கு ஏகோஜி ராஜா என்று பெயரிட்டார்கள். இந்த ஏகோஜி ராஜாவின் வம்சத்தில் நான்கு யேகோஜி ராஜாக்கள் உண்டானார்கள். சாலி வாகன சகம் 1562 பிரசோற்பத்தி வருஷம்' என்று காணப்படுகிறது போ. வ. ச. தமிழாக்கம் செய்து அச்சிட்டவர்கள்.

"ஏகோஜி ராஜா ஜிஜாபாயின் குமாரர் என்பது சரித்திரத்துக்கு முரணாகவுள்ளது" என்று மட்டும் அடிக்குறிப்பு எழுதினார்கள்[2]. மெக்கன்சி சுவடியில் இங்குக் காணப்படுவது [3]பின்வருமாறு:

"ஜிஜாபாயி சாயபு பூரண கெற்பமாக இருந்தவள் சாலியவாகன சகம் 1551 யிங்கிலீஷ் வருஷம் 1628 பிரமோதுாத வருஷம் புத்திறோச்சவமாச்சுது. உடனே சஹாஜி றாஜாவும் வந்து சேர்ந்து நமக்குச் செயமான சமையத்தில் புத்திறோச்சவ மாச்சுதென்று றொம்பவும் சந்தோஷத்தையடைந்து அந்த பிள்ளைக்குச் சிவனேரி கெடியிலே பிறந்தபடியினாலே சிவாஜி றாஜா என்று நாமகரணம் பண்ணினார்".

இங்ஙனம் மெக்கன்சி சுவடியில் காணப்படுவதால் போ. வ. ச.வில் தவறு நிகழ்ந்தது என்பது பெறப்படும்.

இனி "அப் புதல்வனுக்கு:ஏகோஜி ராஜா என்று பெயரிட்டார்கள்" என்ற வாக்கியம் மெக்கன்சி சுவடியில் சுமார் 3 பக்கங்கட்குப் பிறகு "அந்தப் பிள்ளைக்கு யேகோஜி ராஜாவென்று பேர் வைத்தார்கள். இந்த வமிசத்தில் இவர் நாலாவது யேகோஜி றாஜா, பிறந்தது சாலியவாகன சகாப்தம் 1552 பிறசோத்பத்தி வருஷம்" என்று காணப்பெறும்.

எனவே போ. வ. ச.வில் காணப்படும் பிழையைப் போக்குவதற்கு மெக்கன்சி சுவடிகள் துணை நிற்கின்றவாற்றை அறிந்து இன்புறலாம்.

இந்தச் சுவடியின் முகப்பில் 17-5-34 என்று ஒரு எண் குறிப்பு இருக்கிறது. இதனை நிலைக்கால் தட்டு எண் (Shell number) என்பர் திரு. T.V. மகாலிங்கம் அவர்கள். இந்த எண் டெய்லர் அச்சிட்டபட்டியலில் மையால் எழுதப்பெற்றுள்ளது.


  1. 4. இந்நூல் பக்கம் 185 காண்க.
  2. 5. போ. வ. ச. பக். 17 அடிக்குறிப்பு
  3. 6. இந்நூல் பக்கம் 22-23 காண்க.