பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தஞ்சை மராட்டிய

என்று இச்சுவடியின்[1] தொடக்கத்தில் காணப்படுகிறது. இதனால் சரபோஜி கட்சியைச் சேர்ந்தவர்கள் கும்பினியாருக்கு அமர்சிங்குக்கு எதிராக ஒரு கடிதம் எழுதினார் என்றும், அமர்சிங்கைக் காட்டிலும் சரபோஜிக்கே அரசுரிமை பெற உரிமையுண்டு என்று வலியுறுத்தி எழுதினார் என்றும் தெரிகிறது.

இந்த யாதி (ஆழ்ந்த கருத்து) பெயர்த்தெழுதப்பட்ட நாள் 8-3-1810 ஆகும்.[2]இது தரங்கம்பாடியில் தின்மாற்கு (Denmark) அரசரின் அலுவலர் வீட்டிலிருந்த ஏட்டை நோக்கிப் பிரதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இச்சுவடியில் மூலபுருஷர் புதாசிராசா வென்று கூறப்பட்டுள்ளது; (இவர் பாவாஜியாகலாம்). தோசிராசர் மக்கள் இருவர்; மாளோசி, விட்டோசி. மாளோசியின் மகன் சாசி. "அவர்களுடைய வயத்திலே மூத்த பெண்சாதியுடைய மகன் யேகோசி ராசா (............)[3] பெண்சாதியுடைய மகன் சிவாசி ராசா.' யேகோசி ராசா தஞ்சாவூரைக் கைப்பற்றினார். அவருக்குப் பிறகு அவருடைய மக்கள் மூவர், சாசி ராசா, சரபோசி, துக்கோசி முறையே ஆட்சி செய்தனர். துக்கோசிக்குப் பட்டத்தரசியின் மகன் பாபா சாயபு. கத்தியைத் தொட்டு விவாகம் பண்ணின பெண் பிள்ளைக்கு மூன்று மக்கள். முதலாவது அண்ணா சாயபு; இரண்டாவது நானாசாயபு மூன்றாவது பிரதாபசிங்கு. துக்கோசிக்குப் பிறகு பாபாசாயபு பட்டம் எய்தினார். இவர் ஒராண்டு ஆட்சி செய்தார். இவருக்குப் பிறகு புதாசி ராசாவின் பேரப்பிள்ளை கெங்காசி ராசா, பாபா சாயபுடைய பெண்சாதி சுசான்பாயி சிறிது நாள் ஆட்சிபுரிந்தனர்[4]. கெங்காசி யிறந்து போனார். ஆகவே சுசான்பாயி மட்டும் ஆட்சி புரிந்தார். இவர் மூன்றாண்டுகள் ஆட்சிபுரிந்தார். சயிது என்ற கில்லேதார், கோயாசி காட்டகே என்பவருக்குச் சொல்லியனுப்பி, ஒருவருக்குக் காட்டு ராசா என்று நாமகரணம் பண்ணி அவருக்குப் பட்டம் கட்டினார்[5]. இந்தக் காட்டுராசா ஒன்றரை வருஷம் ஆட்சி செய்தார். அக்காட்டு ராசாவும் சயிதோடு பகைமை கொண்டமையால் காட்டுராசா கொல்லப்பட்டார். பிறகு பிரதாபசிம்மர் அரசரானார். சயிது, வஞ்சகமாக


.


  1. 13. G. O. M. L. Madras, Big Vol. IV, Page 277; Section 8, Account of the Mahratta Raja's of Tanjore.
  2. 14. G. O. M. L. -do- -do
  3. 15. இச்சுவடியில் பல இடங்களில் சிதைந்துள்ளமை போல இவ்விடத்திலேயும் சிதைந்துள்ளது. இங்கு விடுபட்ட இடத்தில் "இளைய' என்றிருக்கலாம். போ. வ. ச. விலும் அதற்குரிய மெக்கன்சி சுவடிகளிலும் ஏகோஜியின் தாய் ஷாஜிக்கு முதல் மனைவியென்று குறிக்கப்பட்டமை இங்கு ஒப்பிட்டு நோக்குதற்குரியதாம்"
  4. 16. கெங்காஜி ஆட்சியெய்தியது. இதில் கண்ட புதிய செய்தி (டி 3926, பக்கம் 280)
  5. 17. சரபோஜியின் மனைவி கருவுற்றதாகப் பொய்கூறிக் கொணர்ந்த பிள்ளை வரலாறும் அடுத்து இங்குக் கூறப்பட்டுள்ளது. (டி 3926 பக்கம் 281-82)