பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் வரலாறு

223

1803 முதல் 1849 வரை

போ. வ. ச. கி. பி. 1808க்குரியது. திருமுடி சேதுராமன் சுவடி 1849இல் எழுதப்பட்டது. ஆகவே 1803 முதல் 1849 வரையிலான சில நிகழ்ச்சிகள் திருமுடியில் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

1. உமாஜி ராஜாவின் மகன் ஷாஹு ராஜா சகம் 1695 சாத்தாராவுக்கு அரசர் ஆனார். இப்பொழுது அவரே அரசராக இருக்கிறார் என்று போ.வ.ச.பக். 74இல் கூறப்பட்டுள்ளது.

மேற்கொண்டு திருமுடி சேதுராமன் சுவடியில் பின்வரும் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

ஷாஹுக்கு நான்கு மனைவியர்; மூன்றாவது மனைவிக்குப் பிராதாப சிம்ஹர், ராமச்சந்திரர், சாஹாஜி என்று மூவர் மக்கள்: ஷாஹு 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து சகம் 1730 (கி.பி. 1808) இல் இறந்தார்: மூத்த மகனாகிய பிரதாப சிம்மர் ஆட்சி செய்யுங்கால் கும்பினியாரிடம் சகம் 1789 (கி.பி. 1817)இல் நாட்டினை ஒப்புவித்துச் சமஸ்தான மேல் விசாரணை மட்டும் உடையவரானார். தன் தம்பியருடன் சுகமேயிருக்கிறார். (பக்கம் 251-237)

2. சரபோஜியின் இரண்டாவது மனைவி அஹல்யா பாயி சகம் 1729 கி.பி. 1807) இல் சிவாஜியைப் பெற்றெடுத்தாள் (பக்கம் 453-454).

சிவாஜியின் முதல் மனைவி சைதம்பாபாயி சாகேபு (பக்கம் 454).

சரபோஜி காசியாத்திரையாக 1820-இல் சென்று, வங்காளதேசம் வந்து, தன் மனக்கருத்துக்களை நிறைவேற்றிக் கொள்ள ஆவன செய்தமை (பக்கம் 455-456).

சகம் 1753 இல் சரபோஜி இறந்தமை; பின்னர்ச் சிவாஜி தஞ்சாவூர்த் துர்க்காதிபத்தியம் செய்து கொண்டு நலமேயிருக்கிறார் (பக். 437-48).

3. அமர்சிங்கும் அவர் வழியினரும்: அமர்சிங்குக்கு அவரது மூன்றாவது மனைவியாகிய பவானிபாயி சாயபுக்குக் கி.பி.1798இல் ஒரு மகன் பிறந்தமை: அவருக்குப் பிரதாப சிங்கர் என்று பெயர் வைத்தமை (பக்கம் 459).

அமர்சிங்கு அரசிழந்த பின்னர்த் தஞ்சாவூர்க் கோட்டை மூலை மாடியில் 22 மாதங்கள் தங்கியிருந்து, பிறகு திருவிடைமருதூர்க்குச்சகம் 1722 (கி.பி.1800) இல் புறப்பட்டமை, இடைவழியில் ஆலங்குடியில் 25 நாட்களும், கும்பகோணத்தில் 57 நாட்களும், தங்கியிருந்து பின் திருவிடைமருதூரை யடைந்தமை,

அமர்சிங்கு சகம் 1724இல் (கி.பி.1802) இறந்தமை அவர் இறந்த பொழுது சந்தன மழை பொழிந்தமை (பக். 462-465); அவருடன் அவரது நான்காவது மனைவி பார்வதிபாயி உடன்கட்டை ஏறியமை (பக்கம் 465).