பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

உலகத்திலேயே மிகப்பெரிய கல்வெட்டாகத் திகழ்வது, தஞ்சைப் பெரிய கோயிலில் காணப் பெறுவதும் மராட்டிய அரசர்களது வரலாற்றைக் கூறுவதும் ஆகிய மராட்டிய மொழிக் கல்வெட்டே என்பது பலர் அறிந்த செய்தியாகும். இம் மராட்டியக் கல்வெட்டுக்குரிய தமிழாக்கச் சுவடிகள் பற்றி அன்பர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் சில ஆண்டுகட்கு முன் எழுதிய கட்டுரையொன்று என் நினைவுக்கு வந்தது. அதுபற்றிச் சிந்தித்தபொழுது தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் அன்பர் புலவர் செ. இராசு அவர்கள், சென்னை , அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில்[1] உள்ள மெக்கன்சி சுவடித் தொகுப்புக்களுள் தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு - வமிசாவளி பற்றியுள்ள ஐந்து சுவடிகளின் பெயரும் அவற்றின் நூலக எண்ணும் குறித்துக் கொடுத்தார். சென்னைக்குச் சென்று பார்த்தபொழுது டி.3762 என்ற எண் கொண்ட சுவடி எளிதில் படிக்க முடியாதவாறிருந்தது; டி 3180 என்ற சுவடி படிப்பதற்கெளிதாக இருந்தது. இதன் காப்பீடு (Restored) சுவடியொன்று, டி 3119 என்ற எண் உடையது, குறைச்சுவடி, தெளிவாகப் படித்தற்கியன்ற வண்ணமிருந்தது. டி 3119ஐப் பெற்றுப் படித்துப் பார்த்தபொழுது, அச்சுவடியும், தஞ்சைப் பெரிய கோயிலில் மராத்தி மொழியில் கல்வெட்டாக இருப்பதும், தமிழில் பெயர்த்து ஆங்கிலச் சுருக்கத்துடன் தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்தார் வெளியிட்டிருப்பதுமான போன்ஸ்லே வமிச சரித்திரம் தமிழாக்கம், செய்திகள் கூறுவதிலும் அவற்றின் வரிசையிலும் ஒத்திருத்தல் காணப்படலாயிற்று; சில இடங்களில் சிறிது மாறுபட்டிருத்தலும் அறியவந்தது. போ. வ. ச. வில்[2] பக்கம் பதினேழில் உள்ள அடிக்குறிப்பில் கண்ட ஐயத்தை (பிழையை) இச்சுவடி போக்குமா என்ற நோக்குடன் பார்த்தபொழுது போ. வ. ச. வில் கண்ட பிழையைப் போக்குவதாக இச்சுவடி அமைந்தமை மிக்க மகிழ்ச்சி தருவதாயிற்று. ஆகவே, பிற சுவடிகளைச் சென்னைச் சுவடிகள் நூலகத்தினின்று பெற முயற்சிகள் எடுக்கப்பட்டன. மற்ற இரண்டு முழுச்சுவடிகளும் நுண்படச் சுருள் (Micro Film) எடுத்து அச்சிட்டுப் பார்த்தபொழுது, இறுதியில் சுவடிகளின் நாட்குறிப்பு.

“சாலியவாகன சகம் 1725 ருத்ரோத்காரி வருஷம், 1803 மார்ச்சி மீ 25” என்றும், மராத்தி கல்வெட்டின் தமிழாக்க இறுதியில்,


  1. 1. Madras Government Oriented Manuscripts Library.
  2. 2. போ. வ. ச. - போன்ஸ்லே வமிச சரித்திரம். இந்நூலில் யாண்டும் போ. வ. ச.என்று குறிக்கப்பட்டு வரும். இது சரசுவதி மகால் வெளியீடு எண் 46, இரண்டாம் பதிப்பு, 1980.