பக்கம்:தந்தையும் மகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வாசித்த பொழுது, அங்கிருந்த சிறியவர்களும், பெரியவர்களும் அவற்றை மிகுந்த ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அப்பொழுது சிறுவர்களிடம், புதியதொன்றைக் கற்கிறோம் என்னும் மகிழ்ச்சியும், பெரியவர்களிடம், இவ்வளவு எளிதாக விடை கூறக்கூடியதை இத்துணை நாள் தெரிந்துகொண்டோமில்லையே என்னும் உணர்ச்சியும் காணப்பட்டன.

ரேடியோவில் நடைபெறும் புதிர் நிகழ்ச்சிகள் கேட்டதும் மறந்து விடக் கூடியனவாக இருப்பது போலன்றி இந்நூல் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஆழ்ந்து தங்கி நிற்கும் என்று நம்புகிறேன்.

சுரமானி, பாரச்சூட், ஐஸ் கட்டி செய்தல், வெளவாலின் உடலியல், கடிகாரம் கோடையில் மெதுவாக ஒடுதல், மரச் சட்டங்களை மர ஆணிகளால் பிணித்தல் போன்ற பலதிறப்பட்ட விஷயங்களைப் பற்றித் துல்லியமான விஞ்ஞான அறிவு தரும் கருவூலம் என்றே இந்த நூலேக் கூறத் தகும்.

நூல் நிலையங்களும் வாசக சாலைகளும் சமீபத்தில் இல்லாத ஊர்களில், விஞ்ஞான அறிவு பெற வசதியில்லாத ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று நிச்சயமாகக் கூறலாம்.

தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக அறிய வேண்டிய அவசியமேற்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமின்றி, உயிர் வாழ்க்கையின் ஆழ்ந்த பரிணாம உண்மைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் அனைவர்க்கும் நான் இந்த நூலை மிகுந்த தாழ்மையுடன் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

டி. எஸ். சதாசிவம்.