பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

419


கூடுமானவரை தொல்லை கொடுக்க வேண்டிய அவசியம் நேரிடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியையாவது செய்து பார்த்து விடுவதா? நாம் தொல்லை கொடுப்பதென்று ஆரம்பித்து விட்டால், குதூகலமாய்ப் பின் விளைவுகளைப் பற்றிக்கூட எண்ணாமல், நமக்கு ஆதரவு கொடுக்க மக்கள் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும் இதனால் பதவியிலிருப்பவர்கள் தொல்லைப்படலாமே தவிர, மாறுதலடைந்துவிட முடியுமா? அவர்களைப் பாதுகாப்பதற்கென்று பார்ப்பனர், பத்திரிகைக்காரர், பணக்காரர் முன்வருவார்கள்! நாம் இந்த நான்கு தரப்பாரையும் சமாளிக்க வேண்டும்! நம்மால் சமாளிக்க முடியும்; ஆனால் பொதுமக்கள் மீது இப்போது, அவ்வளவு சுமை ஏற்ற வேண்டுமா? அவ்வளவு அவசியம் நமக்கு இருக்கிறதா?

ஏனென்றால் திரு அண்ணாதுரை தீர்க்கதரிசி அல்லவானாலும், கெட்டிக்காரர்! எவ்வளவு சீக்கிரம் அவர்களை விட்டு, வெளியேற முடியுமோ வெளியேறி, நமது மந்திரியாக ஆனாலும் ஆகக்கூடும். நமக்கே, அண்ணாதுரை மந்திரிசபையை ஆதரித்து, மறுபடியும் அவரே வந்தால் தேவலாம் என்று கருதும்படியான நிலைமை வந்தாலும் வரலாம்!

நாம் காமராஜர் கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற கொள்கையில் இருந்தோம்; இருக்கிறோமே தவிர காங்கிரசின் அடிமை அல்லவே! அதுவும் நிபந்தனையற்ற அடிமை அல்லவே! அப்படி யிருந்தால் பக்தவத்சலம் கண்டன தாள் கொண்டாடி இருப்போமா? இன்றுதான் ஆகட்டும்; நாம் எந்த அளவில் இந்த மந்திரி சபையை ஆதரிப்பவர்களாக ஆகிவிட்டோம்? கொஞ்ச நாளைக்கு எதிர்ப்புக் காட்டவேண்டாம் என்கின்ற நிலையில்தானே இருக்கிறோம்?

காங்கிரஸ்காரரை நினைத்துக்கொண்டு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பக்தவத்சலமே இவர்களுக்கு 6 மாத வாய்தா கொடுத்திருக்கிறாரே; நான் அப்படி வாய்தா கூடக் கொடுக்கவில்லையே? சமயம் எதிர்பாருங்கள் என்பதாகத்தானே சொல்கிறேன்? இதனால் நான் பயந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதானால், எனக்கு உள்ள மரியாதை எவ்வளவு? தோழர்களே! மனதை விட்டுவிடாமல், உறுதியான மனத்தைக்கொண்டு எதையும் சிந்தியுங்கள்!‘’

அடுத்த நாளே, அதிகநாள் தாமதிக்க மனம் பொறுக்காமல், பெரியார், மந்திரிகளுக்குச் சில அறிவுரைகள், உடனடித் தேவையாகத் தர ஆரம்பித்துவிட்டார்! “தேர்தல் காலத்தில் எப்படி எப்படியோ வாக்குறுதிகள் தரலாம். அதற்காக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், அவசரமாக எதையும் சொல்லிவிடக் கூடாது. அரிசிப் பஞ்சமும் ஒரு காரணமாகி, இவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அது ஒரு பலமான காரணமல்ல. அதற்கு இவர்களால் என்ன பரிகாரம் காண முடியும்?