பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

425


இருக்க முடியும்? இப்படி இருப்பதனால் தனிப்பட்ட மாநில மக்களுக்கு வரும் இலாபம் என்ன?

55கோடி பேருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான சாதி யாருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான மொழி பேசுகிறவர்களுக்கும் ஒரே நாடு, நூற்றுக் கணக்கான கலாச்சாரம் கொண்ட மக்களுக்கும் ஒரே நாடு. பல்வேறு மதம் உடைய மக்களுக்கும் ஒரே நாடு - அதாவது இவ்வளவு பேர்களுக்கும் ஆட்சிக்கு ஒரே ஒரு நாடு இத்தனை பேரையும் அடக்கி ஆள ஒரே ஒரு கட்சி என்றால், இது என்ன நாடா? பாழா? நரகமா? ஜெயிலா? சர்க்கஸ்காரன் வளையத்துக்குள் இருக்கும் மிருகப் பிராணி போல், இப்படி இருக்க என்ன அவசியம் உள்ளது? இதுதான் சுதந்திரமா? மானம் - ரோஷம் கண்ணாடி போட்டுக் கொண்டு பாருங்கள்!

உலகில் எங்கே இப்படி ஒரு நாடு இருக்கிறது? ஓர் ஆட்சி இருக்கிறது என்று கேட்கிறேன்?”

சுயமரியாதை இயக்க, திராவிடர் கழகத் தனிக்கூட்டம் (Sepecial Meeting); காலம் 9.4.1967 ஞாயிறு காலை 10 மணி; இடம் திருச்சி பெரியார் மாளிகை; விஷயம் தற்கால நிலை, எதிர்காலப் போக்கு, ஸ்தாபன விஷயம், மற்றும் அப்போது அவைக்குத் தோன்றும் விஷயங்கள்-ஈ.வெ. ராமசாமி, தலைவர் சுயமரியாதை ஸ்தாபனம், திராவிடர் கழகம் - என்று “விடுதலை”யில் விளம்பரப்படுத்தப்பட்டது, கழகத் தோழர்களின் கலக்கம், குழப்பம், அச்சம், தயக்கம், மயக்கம், வியப்பு, வேதனை அனைத்துக்கும் ஒரே அருமருந்தாய் அமைந்தது! அவ்வாறே, சுமார் 2,500 தோழர்கள், உறுப்பினர் தாளில் கையொப்பமிட்ட பின் உள்ளே நுழைந்து, விவாதங்களில் பங்கேற்றனர். நம் கொள்கைக்குப் பாதகமில்லாத வரையில், தி.மு.க. ஆட்சியை எதிர்க்கத் தேவையில்லை, என்று பெரியார் பேசினார். கமிட்டியில் காமராஜர் தோல்விக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் குறித்துப் பெரியாரின் அறிக்கை, அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வகுப்புரிமை, தனிநாடு கிளர்ச்சிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. திருச்சிக் கமிட்டித் தீர்மானங்களை விளக்கி “விடுதலை” 6 நாட்கள் தொடர்ந்து தலையங்கம் தீட்டிற்று.

சட்ட மன்றத்தில், “தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்துவிட்டதாக ராஜாஜி சொல்கிறாரே, உங்கள் பதிலென்ன?“ என்று கேட்டபோது ”ஆமாம்! இப்போது குடும்ப வாழ்க்கை நடக்கிறது!“ என்று முதல்வர் அண்ணா சமத்காரமாய்ப் பதிலுரைத்து விட்டார். ஆயினும், வெளியில் ராஜாஜி, தி.மு.க. அரசின் சில கொள்கைகளைக் கண்டித்து வந்தார். அவற்றுள் ஒன்று, பதுக்கி வைக்கப்பட்ட நெல்தானியங்களை வேட்டையாடி வெளியில் கொணர்வது. இதை ”விடுதலை"பெட்டிச்