பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

429


கோயில், உருவக் கடவுள், பண்டிகை, நெற்றிக்குறி இவைகள் வேண்டுமா? என்று கேட்டிருந்தார். பெரியார்.

தமது ஆராய்ச்சிக்குத் துணையாகப் பழைய நூல் ஒன்றை Referenceக்காகத் தேடிய போது தம் நூலகத்தில் அது கிடைக்காததால், “வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்- 1878-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்ட, தேசிக தாத்தாச்சாரியார் மொழி பெயர்த்த, இராமாயணம் உத்தரகாண்டம் யாரிடமாவது இருந்தால், பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தாலும், வாங்கி அனுப்பித் தந்தால், அதற்குரிய விலையைத் தந்துவிடுகிறேன்“ என்று கையொப்பத்துடன், 18.4.67 ”விடுதலை" யில் பெரியார் செய்தி வெளியிட்டிருந்த பாங்கினைக் கண்ணுற்றோர் அந்த 88 வயது மாணவரின் ஆர்வத்தை வியந்து, மெய்மறந்து நின்றனர்!

“தனியார் மின் நிறுவனங்கள் அரசுடைமையாகும்” முதல்வர் சி.என். அண்ணாதுரை அறிவிப்பு. இது ஏழு காலச் செய்தி. 19.4.67 “விடுதலை” யின் முதல்பக்கம்! அடுத்த நாள், அமைச்சர் மதியழகனும் தலைவர் காமராசரும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து. மதுரையில் இறங்கினர்; காங்கிரஸ், கண்ணீர்த் துளித் தோழர்கள், தங்கள் தங்கள் தலைவர்களை வரவேற்றனர் - என்றொரு செய்தி! சென்னை மத்திய சிறையிலுள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா நெஞ்சுவலி காரணமாகச் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் என்றொரு துணுக்கு நீதிக்கட்சியின் நிர்வாக அனுபவம், சுயமரியாதை இயக்கத்தின் தீவிரக் கொள்கை, காங்கிரசின் ராஜதந்திரம்-இவை எங்கள் ஆட்சிக்கு வழிகாட்டப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அண்ணா கூறியதைப் பலமுகங்களோடு, கேலிச் சித்திரம் போட்டது Mail ஏடு. இதை எடுத்துக் காட்டியது “விடுதலை” மைல் கற்களைக் கூடச் சாமி என்று கும்பிடுவதா? அமைச்சர் மா. முத்துசாமியின் அணுகுண்டு - என்று ஒருநாள் “விடுதலை” செய்தி

பெரியார் ஏப்ரல் மாதத்தில் நிறையத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சிதம்பரத்தில் வெற்றி பெற்ற இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் திராவிடர் கழகம் நடத்திய பாராட்டுக் கூட்டத்திலும், பெரியார் கலந்து கொண்டார். 28-ந் தேதி, காலையில் பெரம்பலூர் வட்டம்' ஓகளுர், அரசினர் உயர்நிலைப் பள்ளிப் புதுக் கட்டடத்தை, வேளாண்மை அமைச்சர் ஏ.கோவிந்தசாமி திறந்து வைத்தபோது, பெரியார் தலைமை தாங்கியதுடன் அண்ணா படத்தையும் திறந்து வைத்தார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகட்கு இதுதான் தொடக்கமாயிருந்தது! இதற்குமுன் 23-ந் தேதி திருச்சியில் பேசும்போதுதான், ஒரு விளக்கம் கூறியிருந்தார் பெரியார். “இந்த