பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆட்சிக்கு ஆதரவு தரச் சொல்லி நான் இன்னும் நமது தோழர்களுக்குக் கூறவில்லை! தொல்லை தரவேண்டாம் என்றுதான் சொன்னேன் இந்த ஆட்சிக்கு நாம் எதிரி அல்ல. தி.மு.க. நகரசபைகளில் என்னைக் கூட இப்போது அழைக்கிறார்கள், போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

“பார்ப்பான், பணக்காரன், பெரியமனிதன்” என்கின்ற தலைப்பிட்டு, 24-ந் தேதி பெரியார் “விடுதலை”யில் தீட்டிய தலையங்கக் கட்டுரை, தீவிர சிந்தனைக்குரியதாகும்:- “இன்று நமது நாட்டில் சுயமரியாதை இயக்கம் அல்லது பகுத்தறிவு இயக்கம் என்பதாக ஒன்று தோன்றிய பின், நாளாவட்டத்தில் பார்ப்பனருக்கும், பணக்காரர்களுக்கும், பெரிய மனிதர் என்பவர்களுக்கும் இருந்த மரியாதை, பெருமை என்பது படிப்படியாய்க் குறைந்து கொண்டு வருகிறது; வந்து விட்டது என்றே சொல்லலாம்! முதல் மாறுதலான பார்ப்பானின் மரியாதை கெட ஆரம்பித்தவுடன், மற்றெல்லா மரியாதைகளும் கெடுவதற்குப் பார்ப்பானே முயற்சியாளனாகவும், உறுதுணைவனாகவும் இருந்து தீர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது!

கடவுளும் மதமும் கெடவேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடந்தான் கடவுள் மதம் கெட்ட இடமாகும். அதுபோலவே நீதி கெடவேண்டுமானால் அரசன் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அரசன் கெட்ட இடம்தான் ஜனநாயகம் என்பது. பார்ப்பான் இல்லையானால் எப்படி கடவுள் மதம் இல்லையோ, அப்படித்தான் அரசன் இல்லையானால், நீதி நேர்மை இல்லை என்பது உறுதி!

1926 முதல் 47 வரை நாட்டில் சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியான திராவிடர் கழகமும் செய்து வந்த பிரச்சாரத்தினால் பார்ப்பான் பெருமையும், பணக்காரன் பெருமையும், பெரிய மனிதர்கள் என்பவர்கள் பெருமையும் நாளுக்கு நாள் தேய்ந்து வர ஆரம்பித்தது! வெள்ளையன், ஆதிக்கத்தை இந்தியரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவுடன், அதாவது இந்தியன் என்பது காங்கிரஸ்காரர்களாகவும், காங்கிரஸ்காரன் என்பது பார்ப்பனராகவும் இருந்து வந்ததால் பார்ப்பான் கைக்கு ஆட்சி, ஆதிக்கம் வந்தது வந்தவுடன் முதல் காரியமாக, இந்தப் பார்ப்பான், பணக்காரன், பெரிய மனிதன் ஆகிய மூன்றையும் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு ஆட்சிச் சட்டம் செய்து கொண்டுவிட்டான்! அதனால் சாதி மதத்தையும், பணக்காரனையும் அதாவது பொருளாதார சொத்துரிமையையும், பெரிய மனிதத் தன்மையையும் அதாவது அந்த ஸ்தானத்தையும் அசைக்க முடியாதபடி அரசியல் சட்டம் செய்து கொண்டான்

இவை மூன்றும் சட்டத்தினால்தான் ஒழிக்கப்பட முடியாமல் இருக்கின்றனவே ஒழிய, அஸ்திவாரமில்லாததால், பாரம் தாங்காமல்