பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெரியார் அறிவுறுத்தல் தலையங்கம் தீட்டினார். “இந்த மந்திரிசபை ஒழிந்தால், அடுத்த மந்திரி சபை எதுவானாலும், அது பார்ப்பன ஆதிக்க, அல்லது பார்ப்பனக் கலப்பு மந்திரி சபையாகத்தானே இருக்கும்?" என்றும் கேட்டார் பெரியார்.

முதலமைச்சர் அண்ணா மருத்துவக் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாய்த் தெரிவித்த கருத்துகளைத் தங்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்கத் திரித்துக் கூறி, “மெயில்”,“இந்து”, “எக்ஸ்பிரஸ்” ஏடுகள் எழுதியதைக் கண்டித்து, Wishful thinking என்று “விடுதலை” ஏடு தலையங்கம் எழுதியது“முதல்வர் பேட்டி, பார்ப்பன ஏடுகளின் விஷமம்“ என்ற தலைப்பில்! தமிழகத்தில் ஆகாஷ்வாணி ஒழிந்து, வானொலி வரப்போவதாக 9.5.67 அன்று, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் சத்தியவாணி முத்து கூறினார். இந்தியக் குடி அரசுத் தலைவராக டாக்டர் ஜாகீர் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சங்கராச்சாரியாரும், ராஜாஜியும் எதிர்ப்புத் தெரிவித்தனர், ”விடுதலை“ வாழ்த்துக் கூறியது. துணைத் தலைவராக வி.வி.கிரி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் “விடுதலை” வரலாறு வெளியிட்டு, வரவேற்றது! திருமணங்களை இனிமேல் சப்ரிஜிஸ்ட்ராரும், கோயில் நிர்வாக அதிகாரிகளும் கூடப் பதிவு செய்யலாம் என்ற அரசாணை 11.5.67 அன்று இடப்பட்டது.

‘உண்மைத் தலைவர் காமராஜர்’ என்றும், ‘மந்திரிகளுக்குத் தலைவலி உதயம்’ என்றும் 12, 13 தேதிகளில் பெரியார் முக்கியமான இரு தலையங்கக் கட்டுரைகள் எழுதினார். "காமராசர் தன் கட்சித் - தோழர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். உண்மையான எதிர்க் கட்சியாகக் காங்கிரசார் செயல்பட வேண்டும். (தமிழ் நாட்டில்) ஆக்க ரீதியான கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும். எல்லாவற்றையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கக் கூடாது என்றார். இதை தி.மு.க. மந்திரிகள் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் மது விலக்குக் கொள்கையிலும் ஜனாதிபதி தேர்தலிலும் இரண்டு முறை கரணம் போட்டுவிட்டார்களே அது கூடாது! திரு. கருணாநிதி, திரு அண்ணாதுரையை இராஜாஜியிடம் அழைத்துச் சென்றார்.

அவரிடத்தில் 2 காரியங்களுக்கு ஒத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து, ஜஸ்டிஸ் சுப்பாராவுக்கு வாக்களிப்பது, இன்னொன்று ம.பொ.சி.க்கு மந்திரி பதவி தருவது. திரு. அண்ணாதுரைக்குக் காரியம் வெற்றி பெறலாம். ஆனாலும் வாசனை போய் விடுமே! ஆச்சாரியாரை நம்பி இனியும் ஏமாற வேண்டாம்!"- என்று எச்சரித்தார் பெரியார். இந்திய யூனியனிலிருந்து தமிழர் வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டால் தான் மானத்தோடு வாழ முடியும், என்று 13-ம் நாள் எழுதினார்.