பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அதன் உள்நோக்கம் என்ன?” இப்படி வேறுபட்ட பிரச்சினைகளிலும் தமது நாட்டத்தைப் பதித்து வந்தார் பெரியார்!

சுயமரியாதைப் பிரச்சாரத்துக்குச் செல்லும் தோழர்கள் “நாள் கடவுளை மறுக்கிறேன். பார்ப்பானை ஏற்றுக் கொள்ள மாட்டேன்; சாதி மதம் பாராட்டமாட்டேன்” என்றெல்லாம் பகுத்தறிவுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக ஒரு நமுனாவில் கையொப்பமிட்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் சேகரிக்க வேண்டும் என்று ஒரு பணி தந்திருந்தார் பெரியார் 23.5.67 அன்று. இது வரை 10,000 கையெழுத்துகள்தான் திரட்டியிருக்கின்றீர்கள்; இந்தப் பணியை இன்னும் மும்முரமாகச் செய்யுங்கள், என்று முடுக்கிவிட்டார். திருச்சி பெரியார் மாளிகையில், 7.6.67 அன்று, காலஞ்சென்ற ஜீவானந்தம் மகள் உஷாவுக்கும், அருணாசலத்துக்கும் திருமணம் என்று பெரியாரும், மணலி கந்தசாமியும் அழைப்பு விடுத்தனர்.

அழைப்பினை ஏற்று முதலமைச்சர் அண்ணாவும் குன்றக்குடி அடிகளாரும் மணமக்களை வாழ்த்திட வந்திருந்தனர். அண்ணா பேச்சு:- “என்னுடைய பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவரான பெரியார் அவர்களே!

நமது தமிழ் நாட்டில் மட்டும் வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும் ஒருவர் எஞ்சினீயராகவும் ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின்போது அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக் காட்டி, அதோ போகிறானே அவன்தான் பெரியவன் டாக்டராக இருக்கிறான். அவன் சிறியவன் வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள் என்று கூறிப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார்.

அது போலப் பெரியாரவர்கள் தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும், அவன் என்னிடமிருந்தவன்; இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை இந்தியாவிலேயே, உலகிலேயே, பெரியார் ஒருவருக்குத் தான் உண்டு! காங்கிரசில் இருப்பவர்களைப் பார்த்து; கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்களைப் பார்த்து; இவர்கள் என்னிடமிருந்தவர்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன். இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள் - என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை அவர் ஒருவரையே சாரும்!

அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை! அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக் கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணிசெய்து வருகிறேன்.