பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மேடையில் பேசிய இந்த முதல் நிகழ்ச்சியே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தது.

மே 24, 25 இருநாட்களும் பெரியார் தஞ்சை மாவட்டம் விடையபுரம் சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு மாணவர்க்குப் பாடம் நடத்தினார். பகுத்தறிவின் முதற் பகை கடவுள் நம்பிக்கைதான் என்று கருத்தறிவித்தார்.

கேள்வி : சாதி ஒழிப்பது என்றால் என்ன? பதில்: நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை மடையர்களை ஒழிப்பது என்பது. இதில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் வேண்டாம். என்று, பெரியாரின் பெயர் போடாவிட்டாலும், அவர்தான் என்று காண்பிக்கும் பெட்டிச் செய்தி ஒன்று, “விடுதலை 6.6.67 முதல் பக்கம் பிரசுரமாகியிருந்தது. 7-ந்தேதி பெரியார் அறிக்கை எனுந் தலையங்கத்தில், பெரியார் விடையபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகங்கள் முதன் முறையாக உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு கழக நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போதும், அமைப்பாளர் முதலாவதாக முன்வந்து, இவற்றைக் கூறவேண்டும். கூட்டத்தினர் ஒவ்வொன்றாக எதிர் முழக்கமாக எதிரொலிக்கவும் வேண்டும். அன்று முதல் இன்று வரை இத்திட்டம் வழக்கத்தில் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். பெரியார் அறிவித்தது:

கடவுள் இல்லை.
கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்.
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்.
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி,

எதார்த்தம் பொன்னுசாமி நாடக உலகில் பழம் பெரும் நடிகர். பலநடிகர்களை உருவாக்கி ஓய்ந்து போனவர் அவருக்கு நிதி திரட்ட நடிகர் கே.ஏ.தங்கவேலு குழுவினர் திருச்சி தேவர் மன்றத்தில் 9.6.67 அன்று நடத்திய ‘மனைவியின் மாங்கல்யம்’ நாடகத்திற்குப் பெரியார் கட்டணம் வாங்காமல் தலைமை தாங்கினார். அந்த வகையில் பெரியாரின் நன்கொடை ரூ.150 என்று கணக்கிடப்பட்டது. அங்கே பேசும்போது பெரியார், தாம் ரஷ்யாவில் பார்த்த மூன்று நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். 36 ஆண்டுகளாக அவற்றை மறக்காமல் இருந்தார். அவற்றில் ஒரு கதையை 8.1.66 அன்று சென்னையில் கூறினார். அடுத்த இரண்டு கதைகளுங்கூடக் கிறிஸ்துவப் பாதிரிமார்களைப் பற்றியவைதாம்; இரண்டு கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தார்கள். அவர்களைப் போலீசார் துரத்தி வந்தனர்.