பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

437


மாதாகோயில் ஒன்று எதிர்ப்பட்டது. அதன் முன்புறம் ஒரு கட்டிலில் எப்போதும் அமர்ந்து பிச்சை கேட்கும் ஒரு நொண்டியை எல்லாரும் அறிவார்கள். அவன் எங்கோ வெளியில் போயிருந்தான். ஒரு கைதி அவனுடைய இடத்தில் நொண்டி போல் அமர்ந்து கொண்டான். இன்னொருவன் மாதா கோயிலுக்குள் ஓடினான். அங்கிருந்த பாதிரிமார்கள் ஏற்கனவே ஒரு சாதாரண ஆளுக்குப் பயிற்சி கொடுத்து, அவனை மகான் என்று சொல்லி ஊரை ஏமாற்ற, அவனைக் கட்டாயப்படுத்தி ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். ஓடிவந்த கைதி, இரவில் அவனைத் தப்பிப் போக விடுத்துத், தான் அவன் இடத்தில் அமர்ந்து கொண்டான். பாதிரியார்கள் வந்து, மகானின் மகத்துவத்தை மக்களிடம் புகழ்ந்தனர். அவனும் பாசாங்கு செய்து, தனது மகிமையால் வெளியிலுள்ள நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் காலை வரவழைப்பதாய்க் கூறி, நிரூபித்துக் காட்டினான். பாதிரிமார்களுக்கே ஏமாற்றம்; ஆனால் வெளியில் சொல்ல முடியாதே! மகான் கைதிக்குப் பெண்ணையும், பொன்னையும் கொடுத்து அனுப்பினர். கைதிகள் இருவருக்கும் வெளியில் மரியாதை கூடிவிட்டது!

இன்னொரு கதையில் - தூக்குத்தண்டனைக் கைதி ஒருவனுக்குக் கடைசி நேர ஜெபம் செய்ய வந்த பாதிரியாரை, அவன் கொன்று விட்டு, அவர் உடையில் இவன் வெளியேறுகிறான். அவருக்கு இணக்கமான கன்னியா ஸ்திரீகளை இவனும் வசியப் படுத்திக் கொண்டான். அவர்களும் விஷயத்தை மறைத்து இவனைப் போப்பாக்கி விடுகிறார்கள். போப்புக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க - ஒரு ஜட்ஜ் வருகிறார். அவர் இவனுக்கு, முன்பு மரண தண்டனை வழங்கியவர். இவனை அடையாளம் கண்டுகொண்டு காட்டிக்கொடுக்க முனையும்போது, இவன் மதத்துறையில் தனக்குள்ள செல்வாக்கால், அந்த ஜட்ஜையே தொலைத்து விடுவதாக மிரட்டிப் பதவியில் நிலைத்து விடுகிறான்.

இப்படியாக மதத் துறையினரின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தும் நாடகக் கதைகளை நினைவுகூர்ந்தார் பெரியார். அதற்குப்பின், தொடர்ந்து நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய முடிந்தது. 12-ந் தேதி திட்டக்குடியில் கலைஞர் மு. கருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்தபோது, பெரியார் அவரைப் பற்றிச் சிறப்புடன் குறிப்பிட்ட மொழிகள் மறக்கவொண்ணாதவை;-

“கருணாநிதியின் உழைப்பும், முயற்சியும், இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்திருக்காது. அண்ணாதுரை கெட்டிக்காரர்தான். ஆனால் கருணாநிதிக்கு இருக்கின்ற முன்யோசனை அவருக்குக் கிடையாது. 1949-ல் திராவிட மாணவர் பயிற்சி முகாம் ஒன்றினைத் திருவாரூர் தோழர்கள் ஏற்பாட்டின்படி, மாவூரில்