பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

445


மாலையினைச் சூட்டுகிறேன் என்று சரிகை மாலை அணிவித்தார் பெரியாரும். ஊர்வலம் ஊர்ந்தும், நகர்ந்தும், பிளாசா டாக்கீஸ் அருகில் சிலை அமையும் இடத்தையொட்டிய அலங்காரப் பெரும்பந்தலை 11.30 மணிக்குச் சென்றடைந்தது. விழாக் குழுத்தலைவரும், பெரியாரின் மிக நீண்டகால நண்பருமான சே.மு.அ. பாலசுப்பிரமணியம் வரவேற்றார். விழாக்குழுச் செயலாளர் கோவிந்தராஜுலு (“பஞ்சாயத்துச் செய்தி” ஆசிரியர்) முன்மொழிய, டி.டி. வீரப்பா வழிமொழிய, முதலமைச்சர் அண்ணா தலைமை ஏற்றார். டாக்டர் ராஜாசர் முத்தையா செட்டியார் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்த, ராணி மெய்யம்மை ஆச்சி அன்னை மணியம்மையாருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழாவில் அமைச்சர் மா. முத்துசாமி, சி.பா. ஆதித்தனார், டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம், கி.வீரமணி ஆகியோர் பேச, பெரியார் ஏற்புரை நல்கினார். அதே மேடையில் அன்று மாலை 5 மணிக்குக் குன்றக்குடி அடிகளார் தலைமையில், பெரியாரின் முழு உருவச்சிலையினை (நின்று கொண்டிருக்கும் தோற்றம்) காங்கிரஸ் தலைவர் காமராசர் திறந்து வைத்தார். ஈ.வெ.கி. சம்பத், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் உரையாற்றப் பெரியார் சிறப்புச் சொற்பெருக்கு நிகழ்த்தினார். இந்த விழா மேடையில் பெரியாரின் வேன் டிரைவர் மானுவேல் ராஜ், மூன்று குழந்தைகளின் தாயான அலமேலுவைப் புரட்சித் திருமணம் புரிந்து கொண்டார். மேலும் 3 ஜோடி மணமக்களும், தங்கள் திருமணத்தை இங்கேயே நிறைவேற்றிக் கொண்டார்கள். பெரியார் டிரம் வாசிப்பது போலும், காமராசர் புல்லாங்குழல் ஊதுவது போலும், அண்ணா ஜால்ரா போடுவது போலும் “மெயில்” ஏடு கார்ட்டூன் வெளியிட்டுத், தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டது.

பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய முதலமைச்சர் அண்ணா கூறினார்:-

“நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாகிலும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாகும். ஆனால் உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில், இடையில் சில நாள் இல்லாமல் இருந்த பழைய நிகழ்ச்சிதானே தவிர, இது புதிதல்ல! பெரியாரவர்களுடைய 89-வது பிறந்த நாள் விழாவானது, இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையானது. கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக, எல்லாக் கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத் தக்கதாகத், தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் போற்றத்தக்க நிகழ்ச்சியாக, இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.