பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

447


ஒழுக்கமும் பண்பும் வளரத்தக்க விதத்தில் அறிவுப்புரட்சி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நாட்டம். எந்த நாட்டிலும், இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Putting centuries into capsules என்பார்களே அதுபோல!

20 ஆண்டுகளுக்கு முன் வடநாட்டுக்கு நான் அவர்களோடு போயிருந்த நேரத்தில், சில பெரியவர்கள் கேட்டார்கள், உங்களை இன்னுமா விட்டு வைத்திருக்கிறார்கள்? நீங்கள் சொல்வதிலே பத்தாயிரத்தில் ஒரு பங்கு நாங்கள் இங்கே சொன்னாலும், நீங்கள் செய்வதிலே ஆயிரத்தில் ஒரு பங்கு செய்தாலும்கூட, எங்களை அடியோடு அழித்திருப்பார்களே' என்று. அப்படிப்பட்ட வீரமிக்க காரியங்களை நடத்திக் காட்டித், தாம் பெற்ற வெற்றிகளை இப்போது நம்மிடத்திலே ஒப்படைத்திருக்கிறார்கள் பெரியார் அவர்கள்.

இதே திருச்சியிலே, 1945-ல் நடைபெற்ற மாநாட்டுக்கு முதல் நாள் பெய்த பெருமழையால், பந்தலும் திடலும் நாசமாயின. ஒரே இரவுக்குள் தண்ணீர் இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டுப், பந்தல் பக்குவப்படுத்தப்பட்டது பெரியாரின் தொண்டர்களால். அதேபோலத்தான் பழைமைச் சேறும் இப்போது துடைக்கப்பட்டு விட்டது. ஒருமுறை சிவகங்கையிலே செருப்புத் தோரணங்களைத் திரும்பிய பக்கம் எல்லாம் தொங்கவிட்டு, எங்களை வரவேற்றார்கள்.

இன்று அவர்களுடைய பிள்ளைகளெல்லாம், இந்தப் பந்தலுக்குள் குழுமியிருக்கிறார்கள். அன்று வெறுத்தவர் இன்று போற்றுகின்றனர்! இப்படி ஒரு சமூகத்தை, ஒரு நாட்டு மக்களை ஆனாக்கிவிட்ட பெரியார், அவர் காட்டியுள்ள லட்சியப் பாதையில் நாமெல்லாம் நடந்து செல்ல நமக்கு ஆற்றல் தந்து, அவர் நமக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். அந்த வாழ்த்துப் பெறவே, நாம் இங்கே கூடியிருக்கிறோம். பெரியார் கட்டளைப்படி நடந்து தமிழகத்தைப் பொன் மயமாக்குவோம்."

17.9.67ல் திருச்சியில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியாரின் முதலாவது உருவச் சிலையைத் திறந்து வைத்த காமராசர் பேச்சு: “பெரியார் அவர்களுடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சமுதாயத்திற்காகச் சிறந்த தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள் தொண்டின் பலனால் நம்முடைய தமிழகத்தில், சமுதாயத்தில், ஓர் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுச்சியைப் புரட்சி என்றும் சொல்லலாம். அவர்கள் எப்படிச் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மறைய வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அப்படியே அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஏற்றத் தாழ்வுகள் மறைய வேண்டுமென்று விரும்புகிறார்கள்.