பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

457


அன்று பேசிய தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணா , “இந்தி ஆதிக்கம் ஒழிய, என்னுடைய இரத்தம் சிந்தவும் தான் தயாராக உள்ளேன்” என்று வீர முழக்கமிட்டார்.

வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில், பெரியார் தலைமையில், அமைச்சர் மாதவன், சலவையாளர் துறையைத் திறந்து வைத்தார். பின்னர் கூட்டுறவு வங்கியின் கட்டடமாகிய நடேசன் நிலையத்தையும் பெரியார் தலைமையில் அமைச்சர் திறந்தார். ஆம்பூர் நகர மன்றத் தலைவர் சம்பங்கி, இருவருக்கும் வரவேற்பு மடல் வழங்கினார். மறுநாள் டிசம்பர் 25 அன்று பெரியார் ஈரோடு நகரமன்றத்தில் நடந்த விழாவிலும், விருத்திலும் பங்கேற்றார். அடுத்த நாள் வேலாயுதம் பாளையத்தில் பேசும்போது “காமராஜருக்கு முன் புத்தி இருந்தது இப்போது என்ன கோளாறு ஏற்பட்டதென்று தெரியவில்லை . தி.மு.க. ஆட்சி தவறு செய்தால், மக்களிடம் அதை எடுத்துச் சொல்வோம்; 5 வருஷம் ஆனதும் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி வந்தவர், இப்போது மாறிப் பேச ஆரம்பித்து விட்டாரே” என்றார் பெரியார். 27ந்தேதி லாலாப் பேட்டையில் பதவிக்கு வருபவர்கள் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் ஆதரிப்பது எங்கள் வேலையல்ல! நம் தமிழர் சமுதாயத்திற்குக் கேடான காரியம் செய்தால் அவர்களைக் கண்டிக்கத் தவறமாட்டோம்" என்று சொன்னார் பெரியார். 31ந்தேதி திருச்சியில் காலை 11 மணிக்கு அரசு மருத்துவமனையில் “பெரியார் ஈ.வெ.ரா. - மணியம்மை குழந்தைகள் பகுதி”யைக் கலைஞர் தலைமையில் அண்ணா திறந்து வைத்தார். இதற்காகப் பெரியார் 1 லட்ச ரூபாய் வழங்கியதைப் பாராட்டிய கலைஞர், பிற மாவட்டங்களுக்கும் பெரியார் அன்பளிப்புகள் தரவேண்டுமெனக் கோரினார். மணியம்மையாருடன் இந்த விழாவுக்கு வருகையளித்திருந்த பெரியார், “மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி என் சக்தி அனுசாரம் நன்கொடை தருகிறேன். குடும்பக் கட்டுப்பாடு நமது கொள்கையாக இருந்தாலும், பெற்று விட்ட குழந்தைகளை வீணாக்காமல் பாதுகாக்கவே இந்த நிலையம் பயன்படும்” என்று கருத்தறிவித்தார்.

அன்று காலை 10 மணியளவில் “பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் கல்லூரி”க்கான புதிய கட்டடத்தைப் பொதுப் பணி அமைச்சர் தலைமையில், முதலமைச்சர் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் வந்திருந்தார். “பெரியார் கல்லூரியில் பயின்ற நாங்கள், சிக்கனத்தைக் கையாண்டு, இம்மாதிரிக் காரியங்களை நிறையச் செய்ய விரும்புகிறோம்” என்றார் கலைஞர். பெரியாரின் சிக்கனத்தைக் குறிப்பிட அண்ணா ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்:- “பெரியாரோடு ஈரோட்டிலிருந்தபோது, ஜங்ஷனில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில், ஹிட்லர் பற்றிய நல்ல புத்தகம் ஒன்று வந்திருந்தது.