பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தனிச் சுதந்திர நாடாகிவிட்டால் தமிழ் நாட்டிற்கோ, அல்லது இந்தியாவிற்கோ, அல்லது இந்த உலகத்திற்கோ என்ன கேடு ஏற்பட்டு விடும். அப்படிப் பிரியாது இருந்து வருவதால் யாருக்கு என்ன நன்மை உண்டாகும்?” என ஒன்று. மற்றொன்று நாட்டுப்பற்று என்ற தலைப்புடன்- ஒருவன் அவனது சரித்திர அனுபவபூர்வமான ‘தாய்’ நாட்டைச் சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும் என்று வாயால் சொல்வதற்குக்கூட (அவன்) பயப்படுவானே ஆனால் அவன் எந்த அளவுக்கு நாட்டுப்பற்றுடையவன் ஆவான்?” என்பதாக. “தமிழர் நிலைபற்றி எனது கருத்து” என்ற தலையங்கக் கட்டுரையில் இந்தியக் குடி அரசின் துணைத்தலைவர் வி.வி.கிரி சிக்கித் தவித்தார்.” அவர் சமஸ்கிருதம் நாட்டு மொழியாக வேண்டும் என்று கூறிவிட்டாராம். துணிச்சலான பேச்சல்லவா? கட்சிச் சார்பற்ற முறையில் தமிழர்கள் மாநாடு ஒன்று கூட்டி, இந்தி ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது; தமிழ் நாட்டை முழுச்சுதந்தரமுள்ள நாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது மானம் அறிவு சுதந்திரம் உணர்ச்சி உள்ள மக்களின் கடமையாகும்." அடுத்த நாளும் “மான உணர்ச்சி உள்ளவர்கள் பிரிவினைக் கொடி உயர்த்த வேண்டும்” என்று எழுதியதோடு, சென்னை 60-வது வட்ட அண்ணா படிப்பகத் திறப்பு விழாவிலும் பெரியார் அவ்வாறே பேசினார்.

மலேசிய நாட்டின் எல்லா ஊர்களிலும், பெரியாரின் கொள்கை. மணம்பரப்பும் ஊதுவத்தியாகச் சென்ற வீரமணி சிறப்புடன் வரவேற்கப்பட்டார். தமிழகச் சட்டமன்றத்தின் அவசரக் கூட்டம் ஒன்று 23.1.68ல் அழைக்கப்பட்டு, மொழி மசோதாவைத் தமிழகம் ஏற்காது; தேசிய மாணவர் படையின் ஆணைச் சொற்கள் இந்தியில்தான் இருக்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினால் தமிழகத்தில் என்.சி.சி. படையே கலைக்கப்படும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. இதை விளக்கி நேப்பியர் பூங்காவில் அடுத்த இரண்டாம் தேதி பேசிய அண்ணா “இதனால் எங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாங்கள் சிறை செல்ல நேர்ந்தாலும் சரி; சிறைவாசம் எங்களுக்குப் புதியதல்ல! அல்லது உயிரே போவதானாலும் சரி; இந்த உயிர் ஒரு முறைதானே போகும். நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே” என்று வீர முழக்க மிட்டார். 26.1.68 “விடுதலை”யில் அண்ணாவுக்கு... என்ற தலைப்பின் கீழ் பெரியார் தலையங்கம் தீட்டினார்:- “23ந் தேதி சட்டசபை தீர்மானங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் காலேஜில் பயிற்று மொழியாகத் தமிழ் எதற்கு? கல்லூரியில் மாணவர்கள் கற்பது மொழியறிவை வளர்த்துக் கொள்வதற்கல்ல; அறிவுப் பெருக்கத்துக்காகவே! இங்லீஷ் மொழியைக் கற்றுதான் நிபுணர்கள் பல துறைகளில் உண்டாயினர். முதலில் அறிவியல், தொழில், விஞ்ஞானம் இவற்றுக்குத் தேவையான சொற்களைத் தமிழில் உண்டாக்குங்கள்.