பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

461


புத்திமான் பலவானே தவிர, தமிழ் வித்துவான் பலவானாக மாட்டான். எதையோ மனதில் வைத்துக் கொண்டும், யாரையோ திருப்தி செய்யவும், ஓட்டு வாங்கிடவும் இவ்வளவு கேடான காரியத்தை தம்முடைய சமுதாயத்திற்குச் செய்யக் கூடாதென்றுதான் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்” என்று!

மொழிப் பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான், தமிழக முதல்வர் அண்ணாவுடன் பேசக்கூடும் எனச் செய்தி வெளியாயிற்று. “சுதந்திரப் போராட்டத்துக்காக முதன் முதலில் இந்தியாவிலேயே குடும்பத்தோடு சிறைக்குப் போனவன் நான்தானே. அதனால் தமிழ் நாடு பிரிவினைக்கான காரியங்களையும் இப்போது நானே பார்த்துக் கொள்கிறேன்! துணிவில்லாதவர்கள் சும்மா ஒதுங்கியிருந்தால் போதும்;” என்று - அடுத்து, “பிரிவினை பயம்” என்ற தலையங்கமும் பெரியார் எழுதியிருந்தார். “ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழியாகாது. மிகமிகப் பழகிப் போன மொழி. நம்மால், நாம் விரும்பினாலும், புறக்கணித்து ஒதுக்க முடியாத, மொழி” என்று அதற்கடுத்த நாள் எழுதினார். 30-ந் தேதி, “இன்று காந்தியார் கொல்லப்பட்ட நாள். அவர் இருந்திருந்தால், இன்று இந்திய யூனியனும் இருக்காது; அரசியல் சட்டத்தை இப்படி இயற்றிடவும் அனுமதிக்க மாட்டார்” என்ற ஒரு பெட்டிச் செய்தியும் பெரியார் தந்தார். “நமது நீதி இலாகா யோக்கியதை” என்று 31-ந் தேதி எழுதிய தலையங்கத்தில் “சென்னை உயர்நீதி மன்றத்தில் நீண்ட நாட்களாக இரண்டு காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படாததால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சட்டந்தெரியாத ரங்க ராஜன் என்ற பார்ப்பன ஜில்லா ஜட்ஜுக்குப் பதவி உயர்வு தந்தே ஆகவேண்டு மெனப் பார்ப்பனத் தலைமை நீதிபதி தலை கீழாய் நிற்கிறார். கீழ்க் கோர்ட்டில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை மேல் கோர்ட்டில் இருக்கும் தன்னால் குறைக்கப்பட முடியாது என்று சாதாரண சட்ட நுணுக்கங் கூடத் தெரியாத அந்தப் பார்ப்பனருக்காக இவ்வளவு முயற்சி” என்று துணிவுடன் எழுதிக் காட்டினார் பெரியார். 31.1.68ல் ஆந்திர மாநிலத் தெனாலியில், “சமூக நீதி கிடைக்காமல் நீண்ட நாட்களாகக் கொடுமைக்கு ஆளாகிக் கிடந்த மக்களுக்காகப் போராடி வருபவர் பெரியார்” என்று தமிழக முதல்வர் அண்ணா புகழ்ந்து போற்றினார்.

“மதுவிலக்கு என்கிற மடமைக் கொள்கைக்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானத்தை இழப்பதா?” எனப் பெரியார் உத்திரமேரூர் பொதுக் கூட்டத்தில் பேசினார். “கணவன் மனைவியிடம் நீ என் மீது பிரியமாய் இரு என்று சொல்லிக் கொண்டே அவளை முள் கம்பியால் அடிப்பது போன்றே, மத்திய அரசு நம்மை இந்திய யூனியனில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, இந்தித் திணிப்பு போன்ற பாதகமான காரியங்களைச்