பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்ததாகும்” - என்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் தலையங்கப் பகுதிக் கட்டுரைகளைப் பெரியார் எழுதிவந்தார்.

31.1.68 அன்று சென்னை அசோகா ஓட்டலில் டி.சி. மோங்கா என்ற வடவர் - ஒரு மோட்டார் கம்பெனி மேலாளர் - நடுவயதைடைந்தவர் - குடந்தை திராவிடர் கழகப் பெரியவரான (15.11.1979ல் தமது 86 வயதில் மறைந்த) டி. மாரிமுத்துவின் மகள் - மருத்துவத் துறையில் நற்பணியாற்றும் - வயது வந்த பெண் - ஜெயலட்சுமியை மணந்து கொண்டதற்கான பாராட்டு விழாவில், பெரியாருடன் அண்ணாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிங்கப்பூரில் 1.2.68 நடந்த வரவேற்பில் சிறப்பிடம் பெற்ற வீரமணி எஸ். எஸ். ரஜுலா கப்பலில் புறப்பட்டு, 4ந் தேதி காலை 8 மணிக்கு நாகைத் துறைமுகம் வந்தடைந்தார். நாகைப் பகுதிக் கழகத் தோழர்கள், படகிலேறிக் கப்பலுக்குச் சென்று, வீரமணியைக் கண்டு, மரியாதை தெரிவித்து வந்தனர். மறுநாள் சென்னை வந்தடைந்தபோது, காலை 9.30 மணிக்கு, பெருமிதமான வரவேற்பு காத்திருந்தது. 5ந் தேதி பெரியார் தர்மபுரியில் திருமண விழாவில் பங்கேற்றுப், “பெண்களே! படிப்புக்கு முதலிடம் தாருங்கள்! பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் முறையை மாற்றிக் கணவனும் மனைவியும் சிநேகிதராக நடக்க வேண்டும். கோயிலுக்கும், சினிமாவுக்கும் போகாமல், பொருட்காட்சி போன்ற அறிவு வளர்க்கும் இடங்களுக்கே செல்லுங்கள்” என்று அறிவுரை புகன்றார்.

2.2.68 அன்று தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், நாவலர் தலைமையில் பெரியார், அண்ணாவின் உருவப்படத்தினைத் திறந்து வைத்தார். வயிற்று வலி காரணமாக அண்ணா , சென்னைப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, 13.2.68 முதல் 26.2.68 வரை சிகிச்சை பெற்றார். சட்டமன்றம் நடந்து வந்த காலமாகையால், இடையிடையே மருத்துவர்களின் அனுமதியோடு அங்கே சென்று வந்தார். தஞ்சை திலகர் திடலில், பிப்ரவரி 8ந் தேதி பேசிய பெரியார், “தமிழ்நாடு பிரிந்தே ஆகவேண்டும். எனக்குத் தெரியும்; சுயமரியாதை இயக்கத் தோழர்கள் 100க்கு 100 பேரும் பிரிவினையை ஆதரிப்பவர்கள்தான்! தி.மு.க.வில் 99 பேரும், காங்கிரசில் 75 சதவீதம் பேரும் நிச்சயம் பிரிவினைக் கொள்கையை ஆதரிப்பவர்களே! எல்லாருமே தமிழர் என்பதை உணருங்கள்! குடும்பம், பதவி, படிப்பு, பந்தம், பாசம் இல்லாத தமிழர்கள் என்னோடு போராட்டத்தில் சேர வாருங்கள்! தி.மு.க. காரர் பதவியிலேயே இருங்கள். பிறகு நீங்களும் தேவைப்பட்டால் அப்போது உங்களையே கூப்பிடுகிறேன்” என்று பெரியார் முழக்கமிட்டார்.

21ந் தேதி சட்ட மன்றத்தில் அண்ணா “நாங்கள் இந்தியை ஒழிக்க வேண்டிய இடத்தில் ஒழித்தோம்! மத்திய அரசு மொழித்