பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

464

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


விட்டேனே-ஆனால் மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தை வளரவிடாமலிருந்தால், தமிழர்களை முன்னேற்றும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி விளங்கும்” என்று சிறப்புடன் குறிப்பிட்டார்.

1968-69க்கான மாநில அரசின் பட்ஜெட் 0.74 கோடி உபரியாகவும், மத்திய அரசின் பட்ஜெட் 290 கோடி துண்டு விழுவதாகவும் அமைந்தன. 5.3.78 “மெயில்” ஏடு, தி.மு.க. தனது ஓராண்டுச் சாதனை பற்றிப் பெருமை கொள்ளலாம் என்று புகழ்ந்தது. சேலம் உருக்காலையை அவசியமானால் தமிழக அரசே ஏற்று நடத்தும் என அண்ணா அறிவித்தார். மருத்துவக் கல்லூரி நுழைவுப் பேட்டி நடக்கும் என்றும், பிற்படுத்தப்பட்ட மாணவரின் நலன் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிந்தது. அண்ணா நகரில் நடைபெற்ற பொருட்காட்சியை 50 நாட்களில் 30 லட்சம் மக்கள் கண்டுகளித்ததாக முதல்வர் அண்ணா பூரிப்படைந்தார். கல்வி நீரோடை வெள்ளமாய்ப் பெருகியது. துவக்கப் பள்ளிகள் 31,000; உயர்நிலைப் பள்ளிகள் 2,345; கல்லூரிகள் 116; பயிற்சிப் பள்ளிகள் 130; பயிற்சிக் கல்லூரிகள் 20. பேரறிஞர் அண்ணாவை அமெரிக்க அரசு அழைத்தது. யேல் பல்கலைக் கழகமும் அழைப்பு விடுத்ததையொட்டி, அடுத்த திங்கள் புறப்பட இருப்பதாக அண்ணா அறிவித்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பில் ஒருவர் கலப்புத் திருமணத்தைச் சு.ம. முறையில் செய்தாலும், தங்கப் பதக்கத்துக்குத் தகுதி பெறுவார் என அமைச்சர் சத்தியவாணிமுத்து தெளிவு படுத்தினார். “மொழிப் பிரச்சினை மத்திய அரசால் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பிரிவினைக்கு வித்திட்டதாகும், என்பதை மத்திய ஆட்சியினர்க்குப் புரிய வைக்கிறேன்” என்று காமராசர் மனந்திறந்து பேசினார், வாலாஜா அருகே 5.3.68 அன்று!

“பக்குவம் அற்ற மக்களின் கையில் ஓட்டுரிமை வந்தது தான் இந்திய ஆட்சியால் ஏற்பட்ட கேடு. அதனால் சட்ட அவமதிப்பு, ஒழுங்கீனம், நாசவேலை ஆகியவை பெருகிவிட்டன. மனிதப்பண்பே அடியோடு கெட்டு விட்டது. யாவுமே அலங்கோலமாகக் காட்சி தருகின்றன. இப்போது மாணவர்களே நாட்டுப் பிரிவினை கேட்கத் தொடங்கி விட்டார்கள். அது பாவம் என்று ஆச்சாரியார் சொல்கிறாராம்; அதுசரி! ஆனால் அண்ணாதுரையும் கருணாநிதியும் கூடாது என்கிறார்களாமே! சுதந்தரம் கேட்பது குற்றமல்லவே?“ என்று எழுதினார் பெரியார். 5.3.68 “விடுதலை”யில் “காங்கிரஸ் கவனிக்க வேண்டும்” என்னுந் தலையங்கத்தில் "தி.மு.க. ஆட்சி காங்கிரசை விட நலமான ஆட்சி. அது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தண்ணீரில் தன்