பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

99



ஈ.வே.ரா. ஈரோட்டில் சேர்மேனாக இருந்தபோது இராசகோபாலாச்சாரியார் சேலத்தில் சேர்மேனாக இருந்தார். ஈ.வே.ரா.வின் நிர்வாகத் திறமையை இராசகோபாலாச்சாரியார் நன்கு அறிவார்.

ஈ.வே.ரா.வை மக்கள் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது அவரை எதிர்த்து நின்ற சிலர் ஈ.வே.ரா. ஒழுக்கமில்லாதவர் பொறுப்பில்லாதவர் இப்பதவிக்கு அருகதை அற்றவர் என்று கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். கலெக்டர் அதை ஏற்றார்.

ஈ.வெ.ரா. அதை மறுத்து என் மீது பொறாமை கொண்டு கொடுத்த மனு அது. நான் கிட்டத்தட்ட பொது நிறுவனங்களில் தலைவராகவும், உறுப்பினராகவும், செயலாளராகவும் முக்கிய பதவிகள் வகிக்கிறேன். இப்பதவிக்கு நான் முற்றிலும் தகுதியுடையவன் என்று எதிர் மனு கொடுத்தார்.

இரு மனுக்களும் வழக்கறிஞர் இராசகோபாலாச்சாரியாரின் பரிசீலனைக்கு வந்தது. ஈ.வே.ராவைப் பற்றி நன்கு அறிந்திருந்த இராசகோபாலாச்சாரியார் 'ஈ.வே.ரா. மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.

அப்போதிலிருந்தே இராசகோபாலாச்சாரியாருக்கு தன்னோடு ஈ.வே.ரா.வை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.