பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

101


19. காங்கிரஸ் வானில் ஒரு புதிய
ஒளிக் கீற்று

"எனது தொண்டு மற்றவர்கள் செய்வது போல் வெள்ளத் தோடு சேர்த்து செல்லும் நீரோட்டத் திசை வேலை அல்ல; அதை எதிர்த்துப் போராடிச் செல்லும் எதிர் நீச்சல் தொண்டாகும்.

அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குக் கல்லைப் புரட்டுவது போன்றகாரியத்தில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்."

- தந்தை பெரியார்

ஒருவர் ஒரு காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பர். சிலர், ஒரே சமயத்தில் பல காரியங்களையும் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.

அத்தகைய அளப்பரிய ஆற்றல் படைத்தவர் ஈ.வே.ரா. இருபத்தி எட்டுவிதமான பொறுப்புள்ள பதவிகளை; ஒரே காலத்தில் பல்வேறு ஸ்தாபனங்களில் திறம்படச் செய்து காட்டியவர் ஈ.வே.ரா.

எந்தத் துறையானாலும் ஏற்றுக்கொண்ட பணியினை திறமையாகவும், பிறர் மெச்சும்படியாகவும் செய்பவர் ஈ.வே.ரா.

காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் முழு மூச்சாக அக்கட்சிக்காக உழைத்தார். சுதந்திரம் அடைந்தே தீர வேண்டும் என்பது பற்றி ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வந்தார்.

அப்போது, பஞ்சாப் படுகொலை நடந்தது. அதைக் கண்டித்து, பலர் தங்களது அரசு பதவிகளை விட்டார்கள்.