பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தந்தை பெரியார்


மன்னர் ஆள் அனுப்பி ஈ.வெ.ரா.விடம் போராட்டத்தை கைவிடும்படிக் கேட்டுக் கொண்டார்.

அப்படியானால் ஆலயத்தை அரிசனங்களுக்குத் திறந்து விடுங்கள் என்று ஈ.வெ.ரா. கூறினார்.

மன்னர் ஆணைப்படி அதிகாரிகள் ஈ.வெ.ராவையும் கைது செய்து வைக்கம் சிறையில் அடைத்தனர்.

கணவர் கைதாகி சிறையில் இருப்பது அறிந்த நாகம்மையார் உடனே வைக்கம் புறப்பட்டார். கணவர் விட்ட இடத்திலிருந்து போராட்டத்தை தொண்டர்களுடன் நடத்தினார்.

நாகம்மையாரைப் பின் தொடர்ந்து, கேரளப் பெண்களும், தமிழகப் பெண்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தீவிரமாகப் போராடினார்கள். இதற்குக் காரணம், ஈ.வெ.ரா.வும் அவர் மனைவியும் என்பதை அறிந்த மன்னர் ஈ.வெ.ரா.வை வைக்கம் சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

வைக்கத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மன்னர் ஆணையை மதிக்காமல், ஈ.வெ.ரா. போராட்டத்தைத் தொடரவே 1922-ம் ஆண்டு, ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது அரசாங்கம். ஈ.வெ.ராவைச் சிறையில் அடைத்தது.

கணவர் சிறை சென்றதால், நாகம்மையார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

கேரளா முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்த நாகம்மையார்; தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும் -

'அரிசனங்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு' என்று பிரசாரம் செய்தார்.