பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்நூலை எழுதிய அமர் திரு.கே.பி.நீலமணி அவர்கள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கத்தையும்; இலங்கை வாழ் தமிழர்களின் கண்ணீர்க் கதையையும், அந்தக் குழந்தைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘தென்னைமரத் தீவினிலே’ என்ற நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றவர்.

இவர் எழுதிய ‘கவிமணியின் கதை’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இதே நூல் 13 வாரங்கள் சென்னை வானொலியில் ஒலிபரப்பாயிற்று. இவர் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற சங்கீத நூல், கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு பெற்றது.

இவர் எழுதிய மாஸ்டர் ராஜா என்ற சிறுவர் நாவல், தொலைக்காட்சித் தொடராக 13 வாரங்கள் ஒளிபரப்பாகியது. இந்தத் தொடரை சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்த திரு. எஸ். எஸ். ஆர். கலைவாணன். கார்த்திக் சரண் அவர்கள் இந்தத் தொடர் ஒளிப்பரப்பாவதில் பெரும் பங்குவகித்தார்.