பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

21



மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரயில் நிலையங்களிலும், இதர பொது உணவு விடுதிகளிலும் கூட, உயர்சாதியினருக்கெனத் தனியாக இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

மனிதருக்கு மனிதர் ஏன் இந்த வேற்றுமையும் பாரபட்சமும்?

இதையெண்ணி வெட்கப்பட்டு, வெகுண்டு எழ வேண்டிய தமிழனே, தமிழினத்தைச் சார்ந்த ஆதி திராவிடரை அன்னியர் போல் எண்ணியது எவ்வளவு பெரிய அறியாமை!

உடல் வருந்த ஏர்பூட்டி, நிலம் உழுது, களை எடுத்து, நாற்று நட்டு, நீர்பாய்ச்சிக் கதிர்அறுத்து, நெல் நீக்கிய அரிசியை ஆதிதிராவிடன் தீண்டலாம் - ஆனால்

அவன் விளைவித்த அரிசி, வெந்து சோறானதும் - அந்த ஏழை, அன்னியப்பட்டுப் போனான்! அதைத் தாழ்ந்தவன் பார்த்தால் குற்றம், சோற்றைத் தொட்டால் தீட்டு, இது எத்தனை பெரிய சோகம்!

உலக மக்கள் அனைவருமே, இறைவனின் குழந்தைகள் என்பது பொய்யாகி -

'இறைவன் படைப்பில் தீண்டத்தகாத குழந்தைகளும் உண்டு, என்பது நியாயப்படுத்தப் பட்டு வந்த காலமது. இல்லாவிட்டால்,

ஆலயத்திற்கான அஸ்திவாரம் தோண்டுவதிலிருந்து - உச்சியில் கோபுரக்கலசம் வைக்கிற வரை, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த தாழ்த்தப்பட்ட தமிழனுக்கு - ஆலயத்தின் மணிக் கதவங்கள் திறக்க மறுப்பதேன்!