பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தந்தை பெரியார்



கருவறைக்குள்ளே சென்று, கடவுளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தொழ வேண்டும், என்று அவர்கள் ஆசைப்படவில்லை.

கொடிமர நிழல் கூட வேண்டாம், கோபுரவாயிலில் நின்று தரிசித்தாலே போதுமென்று கெஞ்சினார்கள்.

ஆலயத்தின் அருகில் கூட வரக்கூடாதென்று, உயர் சாதியினரால் அடித்து விரட்டப்பட்டனர்.

இதையெல்லாம் நம்புவதற்கு இன்றைய இளைய தலைமுறையினராகிய குழந்தைகளே உங்களுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் -

இப்படியெல்லாம் இந்த நாட்டில் நடந்து வந்தது உண்மை!

இது போன்ற கொடுமைகளையெல்லாம் கண்டு மனம் பொறாமல் -

இன்றைக்கு 117 - ஆண்டுகளுக்கு முன்னர், பிறந்த ஒரு குழந்தை - தாழ்த்தப்பட்டவர்களின் நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்தது.

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள ஈரோட்டில்... அளவற்ற தெய்வநம்பிக்கையும், இறை வழிபாடுகளும் நிறைந்த ஒரு ஆத்திகன் குடும்பத்தில் - நாத்திகமே உருவாய், இறை நம்பிக்கையே இல்லாத அந்தப் பகுத்தறிவுக் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை அழும்போதெல்லாம் 'கடவுள் இல்லை', என்று கூறுவது போலவே ஒலித்தது.