பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தந்தை பெரியார்



தமிழ்நாட்டில் பண்டை கோயமுத்துார் மாவட்டத்திலிருந்த ஈரோட்டில் வைணவ பக்தரான வெங்கடப்ப நாயக்கர் என்பவர் வாழ்ந்து வந்தார்.

அவரது மனைவியின் பெயர் சின்னத் தாயம்மையார் என்று அழைக்கப்படுகிற முத்தம்மாள்.

கணவன் மனைவி இருவருமே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடவுளிடம் மிகுந்த பக்தியும் ஈடுபாடும் உடையவர்கள்.

வெங்கடப்ப நாயக்கர் படிக்காதவர். அதனால் அன்றாடம் பல இடங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

வெங்கடப்பநாயக்கரின் மனைவி மிகுந்த குணவதி. நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்பவர்.

குடும்பத்திற்காகத் தன் கணவர் மட்டும் கடுமையாக உழைப்பதைக் கண்டு அவரால் சும்மா இருக்க முடியவில்லை.

கணவரோடு சேர்ந்து சின்னத்தாயம்மையாரும் கூலி வேலை செய்யப் புறப்பட்டார்.

மனைவியிடம் மட்டற்ற அன்பு கொண்டவர் வெங்கடப்ப நாயக்கர். தன்னைப் போல கல் உடைப்பது, மண் சுமப்பது போன்ற வேலைகளை மனைவியும் செய்வதை அவர் மனம் ஏற்கவில்லை.

"இருவருமாகச் சேர்ந்து உழைத்தால் பற்றாக்குறை இருக்காது. குடும்பமும் விரைவில் முன்னேறிவிடும். பிறகு சுயமாக ஏதாவது தொழில் செய்து பிழைக் கலாம்” என்று கணவருக்கு ஆறுதல் கூறினார்.