பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

41



இராமசாமி அண்ணனுடன் கை கோர்த்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்படுவார். ஆனால்,

ஒழுங்காகப் பள்ளிபோய் சேரமாட்டார். வழியில் அண்ணன் கையை உதறிவிட்டுக் கடைகளில் தின்பண்டம் வாங்கித் தின்பார்.

எதிரில் தென்படுகிற மாணவர்களிடமும்; அப்பாவுக்குத் தெரிந்த மனிதர்களுடனும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார். அந்த சமயங்களில் பள்ளி நினைப்பே இராமசாமிக்கு இருக்காது.

அண்ணன், "பள்ளிக்கு நேரமாகிறது வா தம்பி" என்று அழைத்தால், எரிந்து விழுவார் -

கிருஷ்ணசாமி தம்பியை விட்டுவிட்டு பள்ளி சென்று விடுவார்.

பள்ளிக்கே சென்றாலும் இராமசாமி ஆசிரியர் பாடம் சொல்வதைக் கவனமாகக் கேட்பதில்லை. சக மாணவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

இராமசாமியின் குணாதிசயங்களுக்கு ஒத்த மாணவர்கள் சிலரும் அவர் வகுப்பில் இருந்தனர். பாதி வகுப்பிலேயே அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றப் போய் விடுவார்.

அவரைக் கேலி செய்கிற மாணவர்களுடன் அடிக்கடி, வீண் வம்பிழுத்து. சண்டையிடுவார்.

பள்ளி மைதானத்தில் அவர்களுடன் கட்டிப்புரண்டு அழுக்கான உடைகளுடனே வகுப்பில் வந்து; ஒன்றுமே அறியாதவர் போல், சாதுவாக உட்கார்ந்து கொள்வார்.