பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தந்தை பெரியார்


ஓலைக் கூரை போட்ட குடிசைகளின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள்ளிருந்து, சிறுவன் ஒருவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது.

"என்னை அடிக்காதேம்மா...அடிக்காதேம்மா, நான் இனிமே அந்த ஐயா கூடப் பேசலே; விளையாடப் போகல்லே..." என்று அந்தச் சிறுவன் அலறிக் கொண் டிருந்தான்.

ஒரு கணம் தயங்கிய இராமசாமி, குடிசைக் கதவை உந்தித் தள்ளியபடி உள்ளே நுழைந்து பார்த்தபோது,

அடிபட்டு அழுது கொண்டிருப்பவன் அவரது நண்பன் காளி; அவன் தாயார் கையிலிருந்த விறகுச் சுள்ளி ஒன்றினால் அவனை விளாசிக் கொண்டிருந்தாள்.

இராமசாமி சட்டென்று குறுக்கே புகுந்து காளியை அவன் தாயாரின் பிடியிலிருந்து விடுவித்து விலக்கினார்.

பார்த்தால் பெரிய இடத்துப் பிள்ளைபோல் தோற்றமளித்த இராமசாமியின் இந்தச் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கிப் போனாள்.

ஒரு கணம் என்ன செய்வதென்று தோன்றாமல், சட்டென்று கையிலிருந்த விறகுக் குச்சியைக் கீழே போட்டுவிட்டு 'வந்திருப்பது யார்?' என்று விழிகளால் கேட்பதுபோல், பயந்தபடி காளியைப் பார்த்தாள்.

தன் நண்பர் இராமசாமி தன் வீடுதேடி இந்த சமயத்தில் இப்படி நிற்பார் என்று சற்றும் எதிர்பாராத காளி பிரமிப்போடு இராமசாமியைப் பார்த்தான். தாயிடம் பட்ட அடிகளின் வேதனையை மீறி, அவனுள் சந்தோஷம் பொங்கிற்று.