பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தந்தை பெரியார்


இதையெல்லாம் எண்ணிப் பார்த்தபோது,

இராமசாமிக்கு வேடிக்கையாகவும் - மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது.

ஒருகணம் அவர் தங்கள் குடும்பத்தையே எண்ணிப் பார்த்தார்.

இராமசாமியின் தாயார், மற்றெவரையும் விட வைணவ பக்தர்களான, தங்கள் சாதிதான் உயர்வானது என்று எண்ணுபவர். அதையே, மகனிடம் கூடப் பலமுறை கூறி உபதேசம் செய்திருக்கிறார்.

ஆனால் -

ஆசிரியரின் மனைவியோ, 'ஒதுவார் சாதியே உயர்வு', என்று அவரை அங்கீகரிக்கவில்லை.

இராமசாமிக்கு இவை எல்லாமே வேடிக்கையாகத் தோன்றியது.

ஒவ்வொரு பிரிவினரும், மேல் மட்டத்தில் தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுர அவர்களுக்குள்ளும் வேற்றுமை இருந்தது.

ஆனால் -

ஆதிதிராவிடர்களை அன்னியர்களாக எண்ணித் தள்ளி வைப்பதிலும்; தீண்டத்தகாதவர்கள் என்று தெருவுக்குள் விடாமலிருப்பதிலும் மட்டும்; அனைத்து மேல் சாதியினருமே ஒற்றுமையாயிருந்தனர். இதற்கு இராமசாமியின் குடும்பமும் விதிவிலக்கல்ல.

இராமசாமியின் அம்மா, விரதம், தெவசம், நோன்பு, காலங்களில் வேற்று சாதியினருடன் பேசவோ; அவர்கள் கண்ணில் படவோ கூட மாட்டார்.