பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டில் அம்மா, தன் குழந்தைகளுக்கென்று ஆசையாய்ச் செய்து வைத்திருக்கும் இனிப்புப் பண்டம், பலகாரங்கள் எல்லாம் இரகசியமாக இராமசாமி மூலம் சேரிக் குழந்தைகளை வந்து அடையும்.

அவர்கள் கனவு கூடக் கண்டிராத அந்த நெய்ப் பண்டங்களை - சேரிக் குழந்தைகள் ரசித்து உண்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

இப்படியெல்லாம் நடந்து கொள்வதின் மூலம் உயர் சாதியினருக்குத் தான் ஏதோ தண்டனை கொடுத்து விட்டது போன்ற ஓர் ஆத்ம சந்தோஷத்தை இராமசாமி தனக்குள் அனுபவித்தார்.

அந்த மகிழ்ச்சியைத் தன் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் -

இராமசாமியின் இந்த அல்ப சந்தோஷமும், சுதந்திரமும் திடீரென்று ஒரு நாள் பறிக்கப்பட்டு விட்டது.

ஆம்!

உயர்சாதியினருக்குத் தலைக் குனிவு ஏற்படுத்தும் இராமசாமியின் செய்கைகள் எல்லாம் - சேரியிலிருந்து; சலீம் வீடு சென்று வருவது வரை - ஒன்று விடாமல் இராமசாமியின் தாயாரிடம் வந்து அறிந்தவர்கள் பலரும், ஒப்பாரி வைப்பது போல், புகார் செய்து புலம்பித் தீர்த்தனர்.

மகன் திருந்தி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்த சின்னத் தாயம்மையார், மிகுந்த வேதனைக்குள்ளாகி, எல்லாவற்றையும் ஒன்று விடாமல், தன் கணவரிடம் கூறிவிட்டார், அதன் விளைவு?