பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

71


அவர்கள் மகிழ்ச்சியோடு கூறுகிற விளக்கங்கள் தனது பகுத்தறிவுக்கு ஏற்பதாக இல்லாவிட்டாலும்; வாதம் செய்ய மாட்டார். வாதம் செய்தால், அதிகப் பிரசங்கி என்று பிறகு கதை சொல்ல மாட்டார்கள்; அதன் பிறகு அவர்களிடமுள்ள விஷய ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்வதோ;

எடை போடுவதோ எப்படி!

மேலும், முன்பு ஒரு சமயம், இப்படி ஒருவரிடம் வாதம் செய்து, அப்பாவின் கோபத்திற்கு ஆளானதை அவர் மறக்க இல்லை.

விடுமுறை நாளைக் கூட வீணாக்காமல், இராமசாமி தன் வீடு வந்து கதை கேட்பதை சில உபன்யாசகர்கள், பெருமையாக சின்னத் தாயம்மையாரிடம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் அந்தத் தாய் மகிழ்ந்து போவார்.

தன் மகன் மிகவும் திருந்தி விட்டான்; தீய வழிகளை விட்டு, இறைவனிடமும், பக்தி மார்க்கத்திலும் அவன் மனம் செல்லவாரம்பித்து விட்டது, என்று பெருமையோடு அடிக்கடி எண்ணிக் கொள்வார்.

கிருஷ்ணசாமி படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மளமளவென்று முன்னேறினார்.

சித்த வைத்தியம் பயின்று பட்டம் பெற்றார். தனது தந்தையார் நிறுவிய தர்ம மருத்துவமனையைக் கவனித்துக் கொண்டார். ஏழை நோயாளிகளுக்கு மனமுவந்து, முழு நேரப் பணியாற்றினார். அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவராகப் புகழ் பெற்றார்.

பெற்றோர் மனம் கோணாதபடி நடந்து இனிய வாழ்வு வாழ்ந்து வந்தார்.