பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

73



இராமசாமி இருசாரருடைய பிரச்சினையையும் நன்கு புரிந்து கொண்டு நியாயம் வழங்குவார். இராமசாமியின் தீர்ப்பில், இரு சாராருமே மகிழ்ச்சியோடு செல்வார்கள்.

தொழில் வட்டாரத்திலிருந்து; இராமசாமியின் இந்த மத்தியஸ்த்தப் புகழ் மெல்ல ஊருக்குள்ளும் பரவி - ஊரில் எந்தப் பிரச்சினை எழுந்தாலும் அதை இராமசாமி வந்து தீர்த்தால் சரி என்கிற நிலைமை உருவாகி விட்டது.

தன் தந்தையாரைப் போலவே, ஈரோட்டில் இராமசாமியின் புகழும், செல்வாக்கும் நாளுக்கு நாள் பெருகி வந்தது. ஊரே புகழ்ந்தது.

மகனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்துப் போன சின்னத்தாயம்மையார், இராமசாமிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்கிற தன் விருப்பத்தைக் கணவரிடம் கூறினார்.

வெங்கடப்பரும், இதுவே நல்ல தருணம் என்று மாமன் மகளான நாகம்மையை, இராமசாமிக்கு மண முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். நாகம்மை, தாதம்பட்டி, அரங்கசாமி - பொன்னுத்தாயி தம்பதியரின் மகள்.

இராமசாமி, நாகம்மையை நன்கு அறிவார். உறவு என்பதோடு, சிறு வயது முதலே, ஒன்றாய்ப் பழகி; ஓடி விளையாடி வந்தவர்கள். ஒருவர் குணத்தை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவரை ஒருவர் உயிருக்குயிராய் நேசித்து வந்தனர்.