பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தந்தை பெரியார்


இராமசாமியின் அறிவும், புகழும் ஈரோட்டைத் தாண்டி சுற்று வட்டாரங்களிலும் பிரபலமாயிற்று.

இளமையிலிருந்தே பழமையை வெறுப்பவராகவும் முற்போக்குச் சிந்தனையுடையவராகவும் இராமசாமி இருந்து வந்தார்.

பிறருக்குத் தான் போதிக்கிற எந்த முற்போக்கும், சீர்திருத்தமும் முதலில் தன் வீட்டிலிருந்தே துவங்க வேண்டுமென்று விரும்பினார். அதனால் -

தன் தாயாருடன் சேர்ந்து விரதம், நோன்பு, கோவில், பூஜை என்றிருந்த தன் மனைவியிடம் அனைத்தையும் கைவிடும்படிக் கூறினார்.

நாகம்மைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருமகளுடைய தர்ம சங்கடமான நிலைமையைப் புரிந்து கொண்ட சின்னத் தாயம்மையார் -

"நீ இனிமேல் எந்த விரதமும் நோன்பும் இருக்க வேண்டாம். இராமசாமியின் இஷ்டப்படியே நடந்து கொள்" என்று கூறிவிட்டார்.

கழுத்திலிருந்த தாலியைக் கழற்றித் தரும்படி இராமசாமி கேட்டபோது மறுப்புக் கூறாமல் கழற்றிக் கொடுத்தார் நாகம்மை.

அதைப் பற்றித் தன் மாமியார் மாமனாரிடம் கூட நாகம்மை கூறவில்லை. ஒன்றுமே நிகழாதது போல் எப்போதும் போல் சகஜமாக இருந்தார்.

நாகம்மை முழுவதும் தன் வழிக்கு வந்துவிட்டதில் மகிழ்ந்த இராமசாமி தாலியை மனைவியிடம் கொடுத்து திரும்பவும் அணிந்து கொள்ளச் செய்தார்.