பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

81


நாகம்மையோ எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்று சகித்துக் கொள்வார். கணவரது எந்த நடவடிக்கை பற்றியும் மாமனார் மாமியாரிடம் குறை கூறவே மாட்டார்.

ஆனால் நாகம்மை இப்படித் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு வாழ்வதை வெங்கடப்பரால் தாங்க முடியவில்லை.

இரவு வெகு நேரம் கழித்து வந்த இராமசாமியை மிகவும் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அப்போது நாகம்மையும் அருகில் இருந்தார். வெங்கடப்பர் இதுபோல் நடந்து கொண்டதில்லை.

பதில் ஏதும் பேசாது மாடிக்குப் போய் விட்ட இராமசாமிக்கு மனது சரியில்லை. இரவு முழுதும் யோசித்தபடி தூங்காமல் விழித்திருந்தார்.

வாழ்க்கையே அவருக்குக் கசந்தது. 'காசிக்குப் போய், பேசாமல் துறவி ஆகிவிடுவது' என்று அவர் மனம் முடிவிற்கு வந்து விட்டது.

எவரிடமும் சொல்லாமல் இரவோடு இரவாக தன் தங்கை கண்ணம்மாவின் கணவருடனும், வேறொரு நண்பருடனும் ஈரோட்டை விட்டு காசிக்குப் புறப்பட்டு விட்டார்.

பொழுது விடிந்தது. தன் கணவரை வீட்டில் காணவில்லை என்றதும் நாகம்மை பதறிப் போனார். உடனே போய் தன் மாமனார் மாமியார் இவர் களிடமும் விபரம் கூறினாள்.