பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

83



இரயிலில், இராமசாமிக்கு இரண்டு பிராமணர்களின் துணை கிடைத்தது. அவர்களும் அவரைப் போலவே காசிக்குச் செல்வதாகக் கூறினார்கள்;

வழியில் பெஜவாடாவில் சில நாள் தங்கி விட்டு, பிறகு காசி போகலாம் என்று இரு பிராமணர்களும் கூறினர். இராமசாமியும் சம்மதித்து பெஜவாடாலில் இறங்கினார்.

அந்த இரு பிராமணர்களும், வீதிதோறும் பஜனை பாடல்கள் பாடி யாசகம் செய்தனர். இராமசாமியும் அவர்களுடன் செம்பு ஏந்திச் செல்வார். அதன் மூலம் கிடைக்கிற அரிசியைக் கொண்டு மூவரும் சமைத்து உண்டனர்.

அவ்வூரிலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தரான முருகேச முதலியார், இந்த பிராமணர்களின் பஜனையையும், கதை சொல்லும் திறமையையும் கண்டு "இனி நீங்கள் யாசகம் எடுக்க வேண்டாம். இங்குள்ள தமிழர்கள் வீட்டில் ஒருநாள் வீதம் சாப்பிடலாம்," என்று ஏற்பாடு செய்தார்.

ரங்கநாத நாயுடு என்பவர் அவ்வூரில் பெரிய செல்வந்தர் அவருடைய வீட்டில் மூவரும் விருந்துண்டனர். மாலை பிராமணர் இருவரும் இராமாயணம் படித்தனர்.

இரவு நாயுடு இராமசாமியைத் தனியே அழைத்து, "நீ இந்த பிராமணர்களை நம்பி காசிக்குப் போக வேண்டாம். இவர்கள் உன்னைக் கைவிட்டு விடுவர்." என்று எச்சரித்தார்.