பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தந்தை பெரியார்


15. பிரிந்தவர் கூடினால் பேரின்பமே...

"வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது.

நன்மை தீமையை அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள்."

- தந்தை பெரியார்

மனிதன் என்னதான் எதிர்நீச்சல் போட்டாலும் வாழ்க்கை வெள்ளம் அது மனிதனைத்தன் போக்கிற்கு இழுத்துச் செல்லவே விரும்புகிறது.

துறவியாகப் போக வேண்டும் என்று புறப்பட்ட இராமசாமி தோற்றுப் போய் எல்லூரில் இறங்கினார். அங்கு தன் நண்பர் சுப்பிரமணியப் பிள்ளையின் வீட்டைத் தேடிப்பிடித்து அடைந்தார்.

முதலில் இராமசாமியை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பிறகு புரிந்ததும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

இராமசாமி வீட்டை விட்டுப் புறப்பட்டுக் காசியில் பட்ட கஷ்டங்கள் வரை ஒன்று விடாமல் கூறினார். சுப்பிரமணியபிள்ளை, இராமசாமியிடம் "நீங்களாக, உங்கள் ஊருக்கு எப்போது போக வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதுவரை இது உங்கள் வீடு" என்று அன்புடன் கூறினார்.

ஒரு நாள் இராமசாமி சுப்பிரமணியப் பிள்ளையுடன் கடை வீதிகளைப் பார்க்கச் சென்றார்.