பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

வரலாறு பற்றிய பொதுவான சில ஆங்கில நூல்களை உடனே நான் படிக்கத் தொடங்கினேன். ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடனோ, விமர்சனக் கண்ணோட்டத்துடனோ நான் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகவில்லையாதலால், நான் என்னென்ன படித்தேன் என்பதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் பெரியாரை நான் நன்கு படித்தவன்; என் சகாக்களில் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் அவரோடு வாழ்ந்தவன்; அவர் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக விளங்கியவன் - என்ற தகுதியோடு இதை எழுதத் துணிவு பெற்றேன்.

பெரியாரே தன்னுடைய (Autobiography) சுயசரித்திரத்தை எழுதியிருக்க வேண்டும். சிந்திக்கவும், உரையாடவும், சொற்பொழிவாற்றவும், தலையங்கம் தீட்டவும், பயணம் செல்லவுமே அவருக்கு நேரமில்லை. ஓய்வாக அமர்ந்து தன் வாழ்க்கை வரலாறு எழுதிட அவரால் எப்படி இயலும்? 1939-40 ஆண்டுக்குப் பிறகு, பெரியாரின்வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதிட, இன்னொரு சாமி சிதம்பரனாரும் உண்டாகவில்லை! சரி, இது வரையில் வேறு யாரும் பெரியாரின் வாழ்க்கை வரலாறு (Biography) எழுதத் தொடங்கவும் இல்லையாதலால் நாமே எழுதுவோம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனாலும், திராவிடர் கழகத்தார், அய்யா அவர்களின் நூற்றாண்டு நிறைவில் ஏதாவது, வெளியிடக் கூடுமே என்ற அய்யம் எழுந்தது. அதனால், என் முடிவை அதிகார பூர்வமாக அறிவித்து விடுவோம் என்று கருதி, என் பழைய நண்பர் கி. வீரமணியைச் சந்தித்துத்,"— தந்தை பெரியார் என்ற தலைப்பில் அய்யாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு — A complete biography of Thanthai Periyar — in prose — எழுதப் போகிறேன். நீங்கள் எழுதுவதானாலும் நான் தடுக்க முடியாது. இந்தத் தலைப்பை மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள் —" என்றேன்.

"சரியான முடிவு! நீங்களே இதைச் செய்வதுதான் மிகப் பொருத்தம்"—என்று மகிழ்ச்சி தெரிவித்து, அன்பின் அடை