பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

யாளமாக ஒரு பார்க்கர் பேனா கொடுத்தார். இதற்குப் பிறகுதான் அரசுத்தரப்பிலிருந்து பெரியார் வாழ்க்கை வரலாறு வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்தது. "அது மிகப்பெரிய அளவில் இருக்கும்; நம் புத்தகம் சிறியது தானே; ஒன்றையொன்று பாதிக்காது" என்ற துணிவு பெற்றேன்! (அரசுப் புத்தக அலுவல் இன்னமும் வளர்ச்சி பெறவில்லை).

அய்யாவைப் பற்றி நமக்கு மற்றவர்களைவிட நிறையத் தெரியும்; சரியாகவும் தெரியும்; என்றாலும், எழுதும்போது மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் வேண்டுமே, எங்கே போவது? -அய்யாவைப் பற்றிய அனைத்துச் சான்றுகளும் ஒருங்கே கிடைக்குமிடம் பெரியார் பகுத்தறிவு நூலகம்-ஆய்வகம் ஒன்றுதான் என்பதை அறிந்து வைத்திருந்தேன். ஆனால், அது lending library அல்ல; அங்கேயே சென்றுதான் படிக்க வேண்டும் என்பது, நான் முன்னர் அறிந்திராத செய்தி, நானே அந்த நூலகத்துக்கு நூற்றுக்கணக்கில் நூல்கள் வழங்கிய வள்ளல்தான்! எனினும் விதி தளர்த்தப் பட முடியாதே! ஆகவே, எடுப்புச் சாப்பாடு, தண்ணீர், காப்பி சகிதம் ஆய்வகத்திற்குப் படையெடுத்தேன். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஓயாத உழைப்பு; ஒருவனாகவே! பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வகத்துக்கு நான் எப்படி நன்றி பாராட்டுவதோ, தெரியவில்லை.

இடையிடையே சிற்சில வால்யூம் தவிரக் "குடிஅரசு", "திராவிடநாடு", "விடுதலை" ஃபைல்கள் நன்கு பராமரித்து வைக்கப்பட்டு, உதவியாயிருந்தன. சில ஃபைல்களை "விடுதலை" அலுவலகத்திலும் பெற்றேன். குறிப்பெடுத்து, வீடு திரும்பி, எழுதத் தொடங்கினேன். ஏறத்தாழப் பத்து மாதக் கடின உழைப்பு. இந்த அலுவல் தொடங்கிய நாள் முதல், அன்றாட முன்னேற்றம் குறித்து, டயரி எழுதத் தொடங்கினேன்; திரும்பிப்பார்க்க உதவுமே என்று! மலைப்பாகத்தான் தோன்றியது.

இந்த நூலை எழுதும்போதும் பதிப்பிக்கும்போதும் நான் யாரையும், எதையும் சார்ந்து இருக்கவில்லை;