பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

யாருக்கும், எதற்கும் கட்டுப்பட்டு இருக்கவில்லை; யாருடைய, எதனுடைய தாட்சண்யத்திற்கும் ஆட்பட்டு இருக்கவில்லை! எனக்குச் சரியென்று தோன்றிய முறையில், என் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப எழுதத் தொடங்கினேன். அதையே ஒரு முழுமையான, நிறைவான வெற்றியாகவும் கருதுகிறேன். முடிந்தவரை, தவறில்லாத உண்மைகளை எழுதப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். நிகழ்ச்சிகளை நிரல்படத் தொகுத்துள்ளேனே தவிர, என் கருத்துகளை எங்கும் திணித்திட முயலவில்லை. ஒரு சுயமரியாதைக்காரன் என்பதை மட்டும் மறக்காமல், எழுதினேன். தஞ்சையில், சுயமரியாதை இயக்கப் பொன்விழாவில் 22-1-76 அன்று மணியம்மையார், எனக்குக் கேடயம் வழங்கினார்கள். பெரியார் நூற்றாண்டு நிறைவுவிழாவில் 15-9-79 அன்று கி. வீரமணி, எனக்குப் "பெரியார் பெருந்தொண்டர்" பட்டயம் வழங்கினார்.

தமிழில் சுய சரித்திரமும், வாழ்க்கை வரலாறும் பெருமளவில் எழுதப் படவில்லை. வெளி வந்துள்ள சில நூல்களில் சாமி சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலாகும். பெரியதொரு தலை வரின் வாழ்க்கைச் சரித்திரம் என்பதோடு; ஒரு biography எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கும் அது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். 40 ஆண்டுகட்கு முன்னர் அது எழுதப்பட்டதாயினும், அந்நூல் என்றுங் குன்றாத பொலிவுடன் கூடியதாகும். அதைப்போல இன்னொரு நூல், அதே தலைவரைப் பற்றி எழுத முடியுமா? என்ற அய்யமும் அச்சமும் என்னை ஆட்கொண்டன. அவர் எழுதி முடித்துள்ள காலம்வரை, என் எழுத்தைச் சுருக்கிக் கொண்டேன். பிறகுதான் விரிவாக நடந்தேன். சாமி சிதம்பரனார் எங்கள் மாவட்டத்துக்காரர், எனக்கும் அறிமுகமானவர். அவர் எழுத்து வழிகாட்டிற்று. அடுத்து, "இது பெரிய முயற்சி ஆயிற்றே; நம்மால் இயலுமா?"’ என்ற தயக்கம் பிறந்த போது, திருச்சி நண்பர் வே. ஆனைமுத்து, மனக்கண்முன் தோன்றினார். திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில்,