பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தோன்றிய மொழியும் தமிழ் மொழிதான்-எனவே தொன்மை வாய்ந்த தமிழகத்தில் தோன்றிய மனித இனமாகிய தமிழினமே மக்கள் குலத்தின் முதன்மை இனம்-என ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு நிறுவியுள்ளனர். தமிழ் மக்கள் விந்திய மலையினைத் தாண்டி வடபுலத்திலும், கடலைக் கலங்களால் கடந்து ரோம கிரேக்க நாடுகளோடும் பர்மா, மலேயா, சீனம் போன்ற நாடுகளோடும் மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் வணிகம் நடத்தினர்; சில நேரங்களில் ஆட்சியினைக் கைப்பற்றி அரசும் நடத்தினர்.

உலகில் மிகச் சிறப்புடன் விளங்கிடும் உயர் தனிச் செம்மொழி தமிழ் மொழியே ஆகும். பழைய மொழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியவை சிதைந்தும் தேய்ந்தும் உலக வழக்கொழிந்தும் மறைந்தும் போயின. என்றுங் குன்றாத வளத்துடன் பழைமைக்கும் பழைமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய், உலகவழக்கும், செய்யுள் வழக்கும் ஒரு சேரப் பெற்று, நிலவி வருவது நம் தமிழ் மொழியே ஆகும்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வரையில் தமிழ் மொழி ஒன்றே இங்கு வழக்கில் இருந்து வந்தது. வடமொழியின் ஆதிக்கத் தாக்குதலாலும், போக்குவரத்து வசதிக் குறைவுகளாலும், தமிழ்மொழி உருமாறித் தெலுங்கு என்று ஒரு பகுதியில் வழங்கப்பட்டது. இதனைப் பேசிய மக்கள் தமிழகத்தின் வடபகுதியில் நிறைந்தனர். வடமேற்குப் பகுதியில் வாழ்ந்தோர், சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் கன்னடம் பேசத் தொடங்கினர். எழுநூறு ஆண்டுகட்கு முன், மேற்குப் புறத்து மக்கள் மலையாளம் மொழியத் தலைப்பட்டனர். எனவே பழந்தமிழ் மொழியின் பண்பு கெடாமல், வழங்கப்பட்டு வந்த தமிழ் நாட்டின் எல்லையின் அளவு மட்டுமே சுருங்கியது.

(தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலேயாளம், துளு ஆகியவை பிறந்தன என்பது சரியல்ல; தமிழ்தான் திரித்து வழங்கப்படுகிறது எனப் பெரியார் ஈ.வெ.ராமசாமி சான்றுகளுடன் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.)