பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மூவருக்கும் கம்பளிப்போர்வை, கை நிறையப் பணம், கல்கத்தாவுக்கு ரயில் பயணச் சீட்டு-இவை வழங்கி, அய்த ராபாத் மக்கள் நன்றி பாராட்டினர். பொருள் தீருமட்டும் கல்கத்தா வாசம், பின்னர் அங்கிருந்த சில நகரத்தார் தமிழ்ப் பெருமக்களின் தயவால், மூன்று பேரும் காசிமாநகர் சென்றடைந்தனர். புனித கங்கையில் நீராடிப், புண்ணியத்தலமாம் காசியில் அடி வைத்தால், பண்ணிய பாவங்கள் நண்ணிடாது ஒழியும் என எண்ணிய இராமசாமிக்கு-அங்கு ஏமாற்றமே எதிர் கொண்டழைத்தது! காசியில் அன்ன சத்திரங்கள் ஆயிரம் நாட்டி, வருவோர் போவோருக்கெல்லாம் தர்மச் சாப்பாடு படைப்பார்கள் என நம்பியன்றோ சென்றார்! சோறு கிடைத்தது; ஆனால் யாருக்கு? மார்புப் பூணுால் துலங்க, மடி சஞ்சியணிந்து, பிறப்பினால் பூதேவர் எனக், கண்டதும் புரிய வைத்த, அந்தப் புண்ணியாத்மா இருவருக்கு மட்டும்! இனி, அவர்களுக்கு ஏன் இராமசாமியின் துணை? சோறு கண்ட இடம் சொர்க்க லோகம் என, வேறு பாட்டையில் விலகிச் சென்றனர். சித்தம் குழம்பினார்; ஏமாற்றம், பசி, பட்டினி, சிறு குடலைப் பெருங்குடல் கவ்விடக், கண்கள் காண மறுக்கக், காதுகள் கேட்க மறுக்கக், கால்கள் நடக்க மறுக்கக், கைகள் சோறு பிசையத் துடிக்கவே-ஒரு சத்திரத்தில் நுழைய முயன்றார். இவர் பார்ப்பனரல்லர் என உணர்ந்த வாயிற் காவலன், அனுமதி மறுத்தான். உள்ளே பந்தி போசனம் நடந்து, பூசுரர் உண்ட மிகுதி எச்சிற் பண்டங் களும், இலையோடு சேர்த்து வெளியே எறியப்பட்டன. எச்சிலை தன்னிலே மிச்சமாய் எறிந்த சோற்றுக்கும், பிச்சைக்காரர் சண்டை தெருவிலே! தானும், கொதிக்கும் கும்பியினை அடக்கிட, அவ்வழி நாடிட ஒருக்கணம் எண்ணினார். கோபம், கொந்தளிப்பு, குமுறல், ஆத்திரம்! வீட்டைவிட்டு வெளியேறிய தவற்றை நினைத்து வருந்தி னார். அங்கே தமது தந்தையார் இயற்றி வரும் தான தருமங்கள் எவ்வளவு? இங்கே தனயனுக்கு ஒரு பிடி அன்னம்,