பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v

யாற்றிய போது, அங்கே அண்ணாவின் உதவியால் புதிதாகத் துவக்கப்பட்ட "கே. ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா"வில், இயக்கத் தோழர்களான டி. வி. நாராயணசாமி, ஆர். எம். வீரப்பன், சிவாஜி கணேசன், பி. எஸ். தட்சணாமூர்த்தி, எம். என். கிருஷ்ணன், ஜி. எஸ். மகாலிங்கம், எஸ். சி. கிருஷ்ணன், (சிவாஜிகணேசன் சக்தி நாடக சபாவில் சேர்ந்த பின்னர் வந்த) எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் நடிகர்களாக விளங்கினர். அண்ணா மூலமாக எனக்கு அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு உறுதுணைவர்களாகக் கரந்தை என்.எஸ்.சண்முகவடிவேல், டி. கே. சீனிவாசன், ஏ. கே. வேலன் ஆகிய நாங்கள் எல்லாரும் அங்கே ஒருங்கே முகாமிட்டு வாழ்ந்தோம்; அண்ணா அடிக்கடி வந்து தங்கிச் செல்வார்.

அஞ்சல் துறை ஊழியனாக ஆனபின்னரும், என்னை ஈரோட்டுக்கே மாற்றினார்கள். அய்யா அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். "அட சனியனே! ஈரோட்டுக்கே போட்டானா?” என்றார்கள். அலுவல் ரயில்வே ஸ்டேஷனிலும், உண்ணலும் தங்கலும்,அய்யா வீட்டிலுமாக, மூன்றாண்டுகள் இருந்தேன். நான் இருந்த காலத்தில் ஈரோட்டில் அய்யா சுமார் பத்து இடங்களிலாவது குடியிருந்திருப்பார். எல்லாம் சொந்த வீடுகள்தாமே! ஈ. வெ. கி. சம்பத், ஈ. வெ. கி. செல்வராஜ், எஸ். ஆர். சந்தானம், எஸ். ஆர். சாமி ஆகியோர் அய்யா குடும்பத்தினர்; எனக்கு அரிய நண்பர்கள். செல்வனும் நானும் வா போ என்று பேசிக்கொள்ளுமளவு நெருக்கம். பி. சண்முகவேலாயுதம் எனக்கு நண்பர், தோழர், புரவலர், ஆலோசகர். பின்னாளில் எனக்குத் திருமணமாகி, நான் ஈரோட்டில் குடும்பம் அமைத்தபோது, தனது வீட்டில் ஒரு பாதியை இலவசமாக ஒதுக்கித் தந்து, அதற்குக் 'கவிஞர் இல்லம்' என்றே பெயரும் சூட்டினார். பெரியாரை முற்றிலும் புரிந்தவர்; அபாரமான விஷய ஞானம் உள்ளவர்; அய்யாவுக்கும் சண்முகவேலாயுதம் நம்பிக்கைக்கு உரியவர்! நாகரசம்பட்டி சம்பந்தமும், சண்முகவேலாயுதமும் இவ்வகையில் ஒத்த பண்பினர்.