பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

1949-ல், குடும்பத்துடன் நான் மாயூரத்திலிருந்து அலுவல் பார்த்தபோதுதான், இயக்கத்தில் பிளவு நேரிட்டது. "நமக்கென்ன; அரசு ஊழியர்தானே?" என்று நடு நிலை வகித்தேன். அய்யா என்னிடம் மிகுந்த நம்பிக்கையோடும் அன்போடும்; மணியம்மையாரைத் திருமணம் செய்த பின்னர்; அவரோடு வந்து, முதல் தடவை மூன்று நாட்களும், அடுத்த தடவை இரண்டு நாட்களும், என் வீட்டில் தங்கிக் சென்றார்கள், ஒய்வாக!

அப்போது என் தகப்பனார் சுந்தரமூர்த்தி, அய்யாவிடம் “You should not have missed Mr. Annathurai” என்றார். அய்யா சிரித்துக் கொண்டார்.

1951-ல் திருச்சியில் பெரியார் மாளிகையில் அய்யாவைப் பார்க்க மாயூரம் நண்பர் காந்தியும் நானும் சென்றிருந் தோம். அய்யா என்னிடம் கொஞ்சம் மாறுபாடாக நடந்து கொண்டதுபோல் தோன்றிற்று! இரவு நேரம்; "சாப்பிட்டு வா" என்றார். அம்மா பரிமாறினார்கள். உண்டு வந்து எதிரில் உட்கார்ந்தேன். "ஏம்ப்பா! இந்த அண்ணாத்துரை, சம்பத்து, கருணாநிதி இவுங்கள்ளாம் மாயவரம் வந்தா, உன் வீட்லதான் தங்குறாங்களாமே?" என்று கோபத்துடன் அய்யா கேட்டார். "ஆமாங்க!" என்றேன் தயங்காமல், தவறென்று கருதாமல் "அப்ப சரி!" என்று கூறிவிட்டு, அருகிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அய்யா! எட்டாண்டு அனுபவம்; எனக்கா புரியாது?

தன் வீட்டுப் பிள்ளை; இவன் தனக்குத் துரோகம் செய்தவர்களோடு கூடிக் குலவிவிட்டு, அதைப் பற்றிச் சிறிதும் வருத்தப்படாமல், ஆமாம் என்றும் ஒத்துக் கொள்கிறானே, என்ற ஆதங்கமும் ஆத்திரமும் அய்யாவிடம் மிளிரக் கண்டேன். இனி சமாதான முயற்சி நடக்காது. "போயிட்டு வாரேனய்யா!" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று மணியம்மையாரிடம் விவரம் கூறி, விடை பெற்று வந்தவன்தான்! பதினாறு ஆண்டு கழித்துதான் மீண்டும் அய்யாவைச் சந்தித்தேன்.